இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல், தமிழகமெங்கும் மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந் நேரத்தில், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தமிழக மக்களுக்கு எந்த விதமான ஆக்கப்  பூர்வமான திட்டங்களையும் கேட்டுப் பெறாமல், தன் கட்சியின் சொந்த பஞ்சாயத்தை மட்டும் பேசி திரும்பியுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி  கொடுத்த, 29 கோரிக்கைகள், புதிய மொந்தையில் பழைய கள் அடைக்கப்பட்டு உள்ளதை தான் நினைவூட்டுகிறது என தெரிவித்துள்ளார்..

உள்ளாட்சி நிதி, ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்ட இழப்பீடுத் தொகை என, 17 ஆயிரத்து, 350 கோடி ரூபாய் நிதியை, தமிழகத்திற்கு வழங்காமல், மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இந்த செயலை, 'நிதி ஆயோக்' கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள்  மத்தியில்,சுட்டிக்காட்டும் வாய்ப்பை, எடப்பாடி  தவற விட்டு விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டுவது குறித்து, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி  பேசியதை, நிதி ஆயோக் கூட்டத்தில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  கண்டித்து பேசவில்லை. இது அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த மிகப் பெரிய  துரோகம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி, தமிழக உரிமைகளை, டெல்லியில் அடகு வைத்து, 'என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்' என, கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி, மன்றாடி விட்டு திரும்பி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.