எதிர்வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலானது, ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.வுக்கு மிக கடினமானதாக இருக்கும்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அது எந்தளவுக்கு உண்மையோ, தவறோ! என தெரியவில்லை. ஆனால், சி.ஏ.ஏ. எனும் விவகாரமானது ஆளும் அ.தி.மு.க.வுக்கு இப்போதே பெரும் நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. 

ஆளும் அ.தி.மு.க. சொல்வது போல் சி.ஏ.ஏ. என்பது மாநில அரசுகளின் அதிகார வட்டத்தினுள் வருவது அல்ல!தான்.  ஆனால், இந்த சட்டமசோதாவை எதிர்க்கும் மாநில அரசுகள் சில, தங்களின் சட்டமன்றத்தில் அதை எதிர்த்து தீர்மானமே போட்டு, எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர். இதைத்தான் தமிழக அரசிடமும் எதிர்பார்க்கின்றனர் சிறுபான்மையின மக்களும், தமிழக எதிர்க்கட்சிகளும். ஆனால் அதை செய்யவில்லை ஆளும் அ.தி.மு.க. அரசு. அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய தேர்தல் சவாலாக உருவெடுத்துக் கொண்டுள்ளது. 


சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தோர், மிக முக்கியமாக தமிழக இஸ்லாமியர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் இந்த மசோதாவை விமர்சித்து, அந்த அடிப்படையில் மத்திய மற்றும் தமிழக அரசை விமர்சித்துக் கிளர்ந்து எழுந்து கொண்டுள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்தும், ஏற்கவே கட்சிகள் மற்றும் அமைப்புகளின் அடிப்படையில் இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து வைத்திருப்போரும் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக ஒரு  பிரமாண்ட கண்டன நிலையை உருவாக்கி வருகிறார்கள். 


இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரான முபாரக் “மாநில அரசின் கையில் சி.ஏ.ஏ. குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை! எனும் ஒற்றை வரியை சொல்லி எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கிறது எடப்பாடியாரின் அரசு. நாங்கள் அவரிடம் கேட்பது ‘எதிர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றுங்கள்’ என்பதுதான். ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையன்றி வேறேது பற்றியும் தீர்மானம் கூடாது! என்று விதி இருப்பதாக சுட்டிக் காட்டுகிறார்கள். 

ஆனால், அதேவேளையில் 110 விதிகளின் கீழ் மாநிலத்துக்கு சலுகை அறிவிப்புகளை அள்ளி வீசுகிறார் இ.பி.எஸ். இதற்கு மட்டும் விதிவிலக்கு எப்படி கிடைத்தது? ஆக, மக்களை நல்லாவே ஏமாத்துறார் எடப்பாடியார். 

அ.தி.மு.க. அரசின் டெல்லி எஜமானர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் முதல்வரும் பேசுகிறார் என்ற சந்தேகம் எங்களுக்கு நன்றாகவே உள்ளது. இந்த நேரத்துல நாங்க முதல்வருக்கு ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிக்கிறோம்...தமிழக மக்கள் சார்பில் இந்த விவகாரத்தை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மக்கள் உங்களை மதிப்பார்கள், தொடர்ந்து ஆதரவு தருவார்கள். அதைவிட்டுட்டு மத்திய அரசின் எண்ணங்களை இங்கே பிரதிபலிப்பதாக இருந்தால் அ.தி.மு.க. எனும் கட்சியானது, தமிழக மக்களின் மனங்களில் இருந்து அகல்வதற்கு நீங்களே காரணமாகிடுவீங்க. 
இதன் மூலம், ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படும் அரசே  மக்கள் மன்றத்தில் வெற்றி பெறக்கூடிய வாப்பை பெறும்.” என்றிருக்கிறார். 
இதன் மூலம் ’எதிர்வரும் தேர்தலில் முழுமையாக இஸ்லாமியர்கள் வாக்கு வங்கி  அ.தி.மு.க.வை எதிர்க்கும்’ என்று முபாரக் சொல்லியதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்! என்று அர்த்தம் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 
சிக்கல்தான்!