மக்களவையில் ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு வைக்க துடிக்கும் இபிஎஸ்.. அப்பாவை போலவே சபாநாயகருக்கு கடிதம் கொடுத்த ஓபிஆர்!
மக்களவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்.பி. கிடையாது என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ள நிலையில், அதற்கு பதில் கடிதத்தை ஓ. ரவீந்திரநாத் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எழுந்த மோதலில் ஓ. பன்னீர்செல்வத்தைக் கட்சியிலிருந்து கட்டம் கட்டி நீக்கி, இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்ஸை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மகனும் தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத், இளைய மகன் ஜெய பிரதீப் ஆகியோரை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கிவிட்டார். கட்சிப் பதவியோடு அல்லாமல் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறிக்க, ஆர்.பி. உதயகுமாரை அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகரிடம் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?
ஆனால், சட்டப்பேரவையில் இபிஎஸ் தரப்பு செய்யும் மாற்றங்களை அங்கீகரிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் அதற்கு முன்பே கடிதம் அளித்திருந்தார். இது ஒரு புறம் இருக்க, நாடாளுமன்றம் மக்களவையில் ஒரே ஒரு அதிமுக உறுப்பினராக இருக்கும் ரவீந்திரநாத், அதிமுக எம்.பி. கிடையாது என்றும் அவர் அதிமுக எம்.பி. என்ற அந்தஸ்தை ரத்து செய்யும்படியும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்கும்படி ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !
இதுதொடர்பாக ஓம் பிர்லாவுக்கு ரவீந்திரநாத் எழுதிய கடிதத்தில், “எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய சிறப்பு பொதுக் குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அவருடைய கோரிக்கையையும், அவர் எழுதிய கடிதத்தையும் நிராகரிக்க வேண்டும்’’ என ரவீந்திரநாத் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இபிஎஸ் - ஓபிஎஸ் மகன் என இரு தரப்புக் கடிதங்களையும் சபாநாயகர் ஓம் பிர்லா பரிசீலித்து, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு தன்னுடைய முடிவை சபாநாயகர் அறிவிப்பார் என்று அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மாஜி அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசின் ரெய்டு ஏன்..? காரணத்தை சொல்லி பொளந்து கட்டும் பொள்ளாச்சி ஜெயராமன்.!