பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 13 கல்லூரிகளில் மட்டுமே 100% இடங்கள் நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,63,154 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு அக்டோபர் 1 தொடங்கி இன்று நிறைவடைந்தது. ஆன்லைனில் நடைபெற்ற கலந்தாய்வில் 70,249 இடங்கள் நிரம்பியதாகவும் 92,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாகவும் கலந்தாய்வை நடத்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

மொத்தம் உள்ள 461 கல்லூரிகளில் 13 கல்லூரிகளில் மட்டுமே 100% இடங்கள் நிரம்பி உள்ளதாகவும், 39 கல்லூரிகளில் 90% இடங்கள் நிரம்பியதாகவும், 139 கல்லூரிகளில் 50% இடங்களே நிரம்பியதாகவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 9 அரசு பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் நிரம்பியதாகவும், 103 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் நிரம்பியதாகவும், 20 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

மேலும் 289 கல்லூரிகளில் கட்டடப் பொறியியல் ( Civil Engineering) படிப்பில் OC பிரிவில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்றும், 301 கல்லூரிகளில் Mechanical Engineering படிப்பில் OC பிரிவில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.