2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சிபிஐயும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இதுகுறித்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. 

இதில் மேல்முறையீடு செய்யப்படும் என அமலாக்கத்துறை சார்பிலும் சிபிஐ தரப்பிலும்  கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், 2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சிபிஐயும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.