தேசிய அளவில் காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்! என்று எதிர்பார்க்கப்பட்ட மாஜி மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைதானது ஊசி பட்டாசு போல் ஒண்ணுமே இல்லாமல் போய்விட்டது. சிதம்பரத்தை திஹாரில் வெச்சு செய்து கொண்டிருக்கிறது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை. இந்த நிலையில், சிதம்பரம் போல் வலுவான வழக்கறிஞரான அவரது மனைவி நளினி சட்டநுணுக்கங்களுடன் துல்லியமாக வாதாடி, ஜாமீன் பெற்று, சிதம்பரத்தை தன் வீட்டில் இந்த தீபாவளியை கொண்டாட வைப்பார்! என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு வழி இல்லாத அளவுக்குதான் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளியன்று சிதம்பரம் திஹார் சிறையில்தான் இருக்க வேண்டும் போல! என்று அவரது குடும்பம் நினைத்துக் கொண்டிருக்க, துணைக்கு அவரை மகன் கார்த்தி சிதம்பரத்தையும் உள்ளே அனுப்பிட அமலாக்கத்துறை முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. 


ஆம் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்திட அத்தனை ரூட்களிலும் ஸ்கெட்ச் போடப்படுகிறதாம். இதைப் பற்றி பேசும் அரசியல் பார்வையாளர்கள்....”கடந்த வாரம் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவரை கைது செய்ய முயன்று வருகின்றனர். இதற்காக கார்த்தியின் முன் ஜாமீனை ரத்து செய்வதுதான் அவர்களின் தற்போதைய இலக்காக இருக்கிறது. கார்த்தியை கைது செய்யுமளவுக்கு கிடைத்துள்ள துப்புகள் என்னென்னவென்றால்.... கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான லண்டன் சொத்துக்கள் யார் மூலமாக வாங்கப்பட்டது? என்று விசாரித்ததில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் எம்.டி.யான அனில் அகர்வால் தரப்பிலிருந்து வாங்கிக் கொடுத்ததாக தெரிய வந்ததாம். கார்த்தியின் அட்வான்டேஜ் ஸ்டேட்டஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக ஸ்ரீலங்கா, மலேஷியா, சிங்கப்பூர், லண்டன், துபாய் உள்ளிட்ட அறுபத்து ஏழு நாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ள விபரமும் தெரிய வந்தது. 

ப.சிதம்பரம் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் அவரது மகனான கார்த்தி மிகப்பெரிய முதலீட்டாளராகவும், கடுமையான செல்வந்தராகவும் கன்னாபின்னாவென உருவெடுத்துள்ளார். வளர்ச்சி தப்பில்லை, ஆனால்  95% பைபாஸ் ரூட்டில் வளர்ந்துள்ளார். அதுதான் சிக்கலே.  அமலாக்கத்துறை எல்லாவற்றையும் துல்லியமான ஆதாரங்களுடன் பிடித்துவிட்ட நிலையில், கார்த்தி சிதம்பரம் அந்த ஆதாரங்களைக் கலைக்க இப்போது முயற்சி எடுத்துள்ளதாகவும் தெரியவந்திருக்கிறதாம். அதனால் மளமளவென அத்தனையையும் பிளாக் செய்கின்றது அமலாக்கத்துறை. அப்போது மத்திய அரசில், சிதம்பரத்தின் துறையில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விசாரித்தபோது ‘மந்திரியின் மகன் கொடுத்த நெருக்கடிகளால் கையெழுத்திடுவது, கோப்புகளை நகர்த்துவது, அனுமதி வழங்குவது! ஆகிய வேலைகளை பார்க்க வேண்டியதாயிற்று. நடப்பது பெரும் தவறு என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதிகார மையத்தை பகைக்க முடியவில்லை.’ என்று கிட்டத்தட்ட அப்ரூவராகி இருக்கிறார்கள். 


எனவே கூடிய விரைவில் கார்த்தி சிதம்பரமும் கைதாகலாம்.” என்கிறார்கள்.  ஆனால் சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு நெருக்கமான மனிதர்களோ “அடிப்படையே இல்லாமல் இந்த வழக்கை நகர்த்தி ஸீன் போடுகிறார்கள். முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல்கள் இவை. குற்றமே புரியாமல் கைதானதில் சிதம்பரத்துக்கு கவலையில்லை. இப்போது கார்த்தியையும் கைது செய்திட அவர்கள் துடிப்பது தெரிகிறது. ஆனால் அந்த குடும்பம் கலங்கவில்லை. சர்வாதிகாரம் நிலைக்காது. மக்களே இந்த அதிகார மையங்களுக்கு இறுதி மணி அடிப்பார்கள். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் தரப்பிலும் எந்த தவறுமில்லை. அதை சட்டத்தின் முன் அந்த வக்கீல் குடும்பம் ஆணித்தரமாய் நிரூபிக்கும்” என்கிறார்கள். 
கவனிக்கிறோம் சகலத்தையும்!