ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், அம்மாநிலத்தில் தளர்வுகள் அதிரடியாக ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று 4வது முறையாக உரையாற்றினார். அப்போது அவர் உரையாற்றுகையில்;- கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வல்லரசு நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கக்கூடும். இந்த 21 நாள் ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாட்டு மக்களுக்கு நன்மை விளைந்திருக்கிறது.

இதை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டால் கவலைப்பட வேண்டியிருக்கும். மேலும் மரணங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது. சக ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள், நிறுவனங்கள் ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். கொரோனா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் அதிரடியாக ரத்து செய்யப்படும். ஏழை மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் செய்யப்படும் என கூறியுள்ளார்.