பாமக நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, ரயில் மறியலில் ஈடுபட்ட ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் திண்டிவனத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நதிநீர் உரிமையை வென்றடுக்கும் வரை கேளிக்கைகள் வேண்டாம் என்ற முழக்கங்களுடன் ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னை அண்ணாசாலை,
வாலாஜா சாலை சேப்பாக்கம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கனோர் சென்னையையே அதிர வைத்தனர். காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக காவிரி மீட்பு நடை பயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசுக்கு தங்கள்  எதிர்பார்ப்பை வெளிப்படுத்த இளைஞா்கள் ஐ.பி.எல். போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினா் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியம் அதை கண்டுகொள்ளாமல் காவல்துறையை இறக்கி இந்த போட்டியை நடத்தியது. நேற்று நடந்த போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தலைமையில் சீமான், கௌதமன், தங்கர்பச்சான், வைரமுத்து, வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முழு அடைப்பு காரணமாக பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

திருச்சி ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனத்தில், பாமகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். குருவாயூர் பயணிகள் விரைவு ரயிலை நிறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

அப்போது, குருவாயூர் விரைவு ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ஒருவர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கோஷங்கள் எழுப்பியபடி சென்ற அவரது கை, மேலே சென்ற மின்சார ஒயரில் பட்ட அடுத்த நொடி அவரது உடல் முழுதும் தீப்பற்றியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.