நாடு முழுவதும் காலியாக உள்ள 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் அரியானா (90 தொகுதிகள்), மகாராஷ்டிரா(288 தொகுதிகள்) மாநில சட்டசபைக்கு அக்.,21 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 

இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு துவங்கி, பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் தபால் ஓட்டுக்களும், 8.30 மணி முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட உள்ளன. காலை 11 மணி முதல் சுற்று நிலவர அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

தேர்தல் தொடர்பான பல கருத்துகணிப்புக்கள் ஒரே மாதிரி இருந்தாலும், சில கருத்துக்கணிப்புக்கள் மாறுபட்டதாக உள்ளன. இதனால் இன்று என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன. கருத்து கணிப்புக்கள் உண்மையாகுமா அல்லது பொய்த்து போகுமா என்பது பிற்பகல் முதல் தெரிய துவங்கி விடும். 

இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகள் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் நம்புவதால், இன்று வெளியாகும் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதே போல் தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகளில் வாக்கு எண்ணப்படுகிறது. மேலும் புதுச்சேரி காமராஜ்நகரிலும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.