நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியை தொடர்ந்து தனக்கு நெருக்கமானவர்கள் பலரை எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அனுப்பி வருகிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் கட்சியினரை விட தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை மட்டுமே எடப்பாடி பழனிசாமி அதிகம் நம்பியிருந்தார். ஒரு கட்டத்தில் கட்சியினர் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய நிலையில் அதிகாரிகள் மூலமாகவே தேர்தல் பணிகளை அதிமுக தரப்பு மேற்கொண்டது. மிகவும் நம்பத்தகுந்த அதிகாரிகள் மட்டுமே இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 

அவர்கள் கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் தேர்தல் வியூகத்தையும் அவ்வப்போது மாற்றி அமைத்தது அதிமுக. ஆனால் தேர்தல் முடிவு படுதோல்வியை கொடுத்தது. நூலிலையில் ஆட்சி தப்பித்தது. இதற்கு காரணம் அதிகாரிகள் கொடுத்த சில தவறான தகவல்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.

இதனால் அதிகாரிகள் சிலரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றும் பணியில் எடப்பாடி தீவிரம் காட்டி வருகிறார். மிகவும் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் சிலரை கடந்த ஒரு வார காலமாக சந்திக்காமல் தவிர்த்து வருகிறார். மேலும் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் பலரை தொடர்புகொண்டு ஆலோசனைகள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்று தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. 

இது எடப்பாடி பழனிசாமி டீமில் புதிதாக சேர்ந்த அதிகாரி ஒருவர் கொடுத்த யோசனை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ட்விட்டரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பதிவு தமிழகத்தில் இந்தி மொழியை அவர் வரவேற்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால்தான் உடனடியாக அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டது. இதுநாள்வரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை கவனித்து வந்த சிலரை மாற்றி விட்டு புதிதாக ஒருவரை நியமித்து அதே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு செல்வதற்கு முன்னதாக தனது அரசியல் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து முடித்துவிட்டு புதிய டீமுடன் களமிறங்க எடப்பாடி முடிவெடுத்துள்ளார். இதனால் தான் பல் வலி என்று கூறிவிட்டு வீட்டில் அமர்ந்த படி அரசியல் வியூகம் வகுத்து வருகிறார் எடப்பாடி.