தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம்  தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3  கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

தேர்தலுக்கான தேதிகள் எதிர்பார்த்ததை விட வெகு அருகில் குறிக்கப்பட்டுள்ளன. இனி மத்திய மாநில அரசுகள் எந்த  புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவிக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டே தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி. ஏப்ரல் 1 முதல் விவசாய பம்ப் செட்டுகளுக்கு 24 மணி நேர மூன்று கட்ட மின்சாரம் வழங்கப்படும். வன்னியர் சமூகத்திற்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது என பல திட்டங்களை அறிவித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.