2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற  சட்டசபை தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தன. அதில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதால் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
 

இது குறித்த தேர்தல் ஆணையம் சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில்  விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதில் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் வாக்காளருக்கு தெரிய வரும். இதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பது தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது.