election commission allot admk symbol to eps ops faction

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலாவிற்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அவரது தலைமையில் தனி அணி செயல்பட்டது.

அப்போது, சசிகலாவின் அணியில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், தினகரன் ஆகியோர் இருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலாவின் அணி சார்பில் தினகரனும் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனும் போட்டியிட்டனர். அப்போது, இருதரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியதால், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

பிறகு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு பன்னீர்செல்வம் அணியும் பழனிசாமி ஆதரவாளர்களும் இணைந்து சசிகலா, தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினர். எனினும் தினகரனுக்கும் கட்சியின் நிர்வாகிகள் சிலர், எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் ஆதரவு உள்ளதால், ஓபிஎஸ்-இபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என 2 அணிகளாக தற்போது செயல்பட்டனர்.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகு, சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இரட்டை இலை வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தினகரன் அணி தரப்பிலும் கோரப்பட்டது.

இதற்கிடையே இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அந்த காலக்கெடுவை நவம்பர் 10-ம் தேதி வரை நீட்டித்த உச்சநீதிமன்றம், அதற்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், பழனிசாமி மற்றும் தினகரன் அணி சார்பில் பிரமாணப் பத்திரங்களும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அதன்பிறகு இருதரப்பின் வாதங்களும் எழுத்துப்பூர்வ வாதங்களும் தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கப்பட்டன. இருதரப்பின் விரிவான வாதங்களையும் முழுவதுமாக கேட்டறிந்த தேர்தல் ஆணையம், தெளிவான தீர்ப்பை வழங்குவதற்காக தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கும் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இரட்டை இலை சின்னம் முதல்வர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. எனினும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தினகரன் அணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.