விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நாளையுடன் பிரச்சாரம் முடிவடைவதால் திமுக, அதிமுக தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், களக்காடு ஒன்றியம் கருவேலங்குளம் கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், தமிழக முதல்வர் மற்றம் துணை முதல்வர் உத்தரவிட்டால் தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவன் என கூறியுள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் மக்களிடையே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசிற்கு ஆதரவாக மக்கள் விழிப்போடு இருக்கின்றனர். 2 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.விற்கு வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். 

கனிமொழியை தான் பிரச்சாரக்குழு செயலாளராகவும், ஐ.பெரியசாமியை தலைவராகவும் தி.மு.க நியமித்துள்ளது. ஆனால், திடீரென கனிமொழி வெளிநாட்டிற்கு சென்று விட்டார். கனிமொழியை அரசியலில் இருந்து ஒதுக்குகின்றார்களா, அல்லது தி.மு.க.வில் கனிமொழி வளர்ச்சி கண்டு மு.க.ஸ்டாலின் பயப்படுகிறாரா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

தி.மு.க.விற்கு 73 வயதாகி விட்டது. அந்த கட்சி வீட்டில் தான் உட்கார வேண்டும். மற்ற கட்சிகள் எல்லாம் இப்போது தான் தவழ்ந்து நடந்து வருகின்றது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. கருத்து கணிப்பு இந்த தேர்தலில் எடுபடாது என்றார். மேலும், சுவிஸ் வங்கியில் திமுக,  காங்கிரஸில் எத்தனை பேருக்கு பணம் இருக்கிறது என மோடி கணக்கெடுத்து வருகிறார். கறுப்புப் பணம் பதுக்கிய யாரையும் பிரதமர் மோடி சும்மா விடமாட்டார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.