effect of cauvery water level reduction to tamilnadu

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கி உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்திருக்கிறது.

நூற்றாண்டுக்கும் மேலாக காவிரி நதிநீரை பங்கிடுவதில் பிரச்னைகள் தொடர்ந்து வருகிறது. இதை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 205 டிஎம்சி நீர் தர வேண்டும் என இடைக்கால உத்தரவிட்டது. பின்னர் 2007ல் இறுதித்தீர்ப்பின்போது, 205 டிஎம்சியிலிருந்து 192 டிஎம்சியாக குறைத்தது.

ஆனால், 192 டிஎம்சி போதாது என்றும் கூடுதலாக 72 டிஎம்சி நீர் வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், 192லிருந்து 132 டிஎம்சியாக குறைக்க வேண்டும் என கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடந்த பத்தாண்டுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நேற்று வழங்கியது உச்சநீதிமன்றம். அதில், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் தரப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம் ஏற்கனவே இருந்ததிலிருந்து 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ளது. அந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் கணிசமாக விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் காவிரி நீரை நம்பி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் 6 ஏக்கர் பரப்பில் மட்டுமே காவிரி பாசன விவசாயம் செய்யப்படுகிறது. 

ஒரு டிஎம்சி நீரை 6000 ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். அந்த வகையில் தற்போது 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாயம் பாதிக்கப்படும். இதற்கு முன்னரும் முழுமையான நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. மழை அளவை பொறுத்தே நிலத்தடி நீர் மட்டம் இருக்கும். அதனால் எப்போதும் நிலத்தடி நீர்மட்டம் ஒரே அளவில் இருக்காது.

அதுமட்டுமல்லாமல் காவிரியை நம்பி 25 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி. வெறும் 6 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யும் கர்நாடகாவிற்கு 184.75 டிஎம்சியா? என டெல்டா மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்ட விவசாயிகள், தமிழகத்திற்கான காவிரிநீர் அளவு குறைக்கப்பட்டது இருக்கட்டும். இந்த நீரையாவது முழுமையாக கர்நாடக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.