அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டைரி வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வி செயல்படுத்த முடிவு செய்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு இலவச டைரி வழங்கப்பட இருக்கிறது. மாணவர்களின் அன்றாட வகுப்பறை நடவடிக்கை, கற்றல் திறன் குறித்த தகவல்கள், செயல்பாடு போன்றவைகளை பெற்றோர்களுக்கு  ஆசிரியர்கள் தெரியப்படுத்தும் விதமாக டைரியில் குறிப்பு எழுதி அனுப்ப வேண்டும்.

பெற்றோரும் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் டைரியில் எழுதி உள்ள தகவல்களை தினமும் பார்க்க அறிவுறுத்தப்படுவார்கள். மாணவர் ஒருவர் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் டைரியில் எழுதி அனுப்ப வேண்டும்.

இலவச டைரி மூலம் ஆசிரியர், பெற்றோர்களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி பாலமாக அமைய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 55 லட்சம் மாணவ- மாணவிகள் பயன்பெறுவார்கள். இலவச டைரியில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும். முதல் 2 பக்கங்கள் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்து எழுத கொடுக்கப்பட்டிருக்கும். இதில் மாணவர்கள் புகைப்படம் மற்ற விவரங்களை எழுத வேண்டும். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

இந்த டைரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்படும். இதை தினமும் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டுவர அறிவுறுத்தப்படுவார்கள்.  இலவச டைரி வழங்கும் திட்டம் மூலம் 55.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த டைரி நிபுணர்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதை மாணவர்கள் தினமும் பள்ளிக்கு கொண்டுவர வேண்டும்.

இத்திட்டம் மூலம் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பெற்றோரும், ஆசிரியரும் நன்கு தெரிந்து கொள்வார்கள். மேலும் மாணவர்களின் படிப்புத் திறனை கண்காணிக்கவும் உதவும் என்கின்றனர்.