நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை என நடிகர் சரவணன் கூறியுள்ளார். 

சேலத்தில் தென்னிந்திய நாடக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி, சேலைகள் மற்றும் இனிப்புகளை திரைப்பட நடிகர் சரவணன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காட்டிலும் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தந்து கொண்டிருப்பதால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே நான் ஒரு ரஜினி ரசிகர் தான். ஆனாலும் உடல் நிலையை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. 

அவர் வெளியில் இருந்து கருத்து கூறினாலே போதுமானது. தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பிரபல திரையுலக நட்சத்திரங்களை தவிர மற்ற அனைத்து  நடிகர்களும் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் எடுத்து முடிக்கப்பட்ட புதிய திரைப்படங்களை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே திரையிட தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் முன்வர வேண்டும்’’என அவர் கோரிக்கை விடுத்தார்.