edappadi vs panneer

தற்போதுள்ள நிலையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ, கலைந்தாலோ, அடுத்து அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை மூன்று அணிகளும் அறிந்து வைத்துள்ளன.

சசிகலா குடும்பத்தை பொறுத்தவரை, எப்படியாவது இந்த ஆட்சி, எஞ்சிய காலத்தையும் கழித்து விட்டால், அடுத்து, கட்சியில் தமது செல்வாக்கை நிலை நிறுத்தி கொள்ளலாம் என்பதே கணக்காக உள்ளது.

பன்னீரை பொறுத்தவரை, சசிகலா எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை கையில் எடுத்து, அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்துள்ள நிலையில், அதை நான்கு வருடம் வரை நீட்டிப்பது சிரமம் என்பதால், உடனடியாக தேர்தல் வரவேண்டும் என்றே விரும்புகிறார்.

ஆனால், எடப்பாடியை பொறுத்தவரை, தற்போதுள்ள முதல்வர் வாய்ப்பையும், அதற்கு டெல்லி வழங்கிய ஆசியையும் பயன்படுத்தி, சசிகலா குடும்பம் மற்றும் பன்னீரை வீழ்த்தி விட்டு தனிப்பெரும் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்பதே லட்சியம்.

இதை அறிந்து, தினகரன் ஆதரவாளர்கள் மூலம் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடியையும், அதற்கு எடப்பாடி ஆதரவாளர்கள் தரும் பதிலடியையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார் பன்னீர்.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்ததை தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பன்னீருக்கு ஆதரவு பெருகி வருவது தெரிந்த கதைதான்.

இது பன்னீருக்கான தனிப்பட்ட செல்வாக்கு அல்ல. சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் மேற்கொண்டதன் விளைவாக அவருக்கு கிடைத்த ஆதரவு.

எனவே, தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி, பன்னீரை போலவே, சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க ஆயத்தமாகி வருவது, பன்னீரை கவலை அடைய செய்துள்ளது.

சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு அகற்றப்பட வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற நிபந்தனைதான், பன்னீரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

அந்த இரண்டு கோரிக்கையையும் எடப்பாடி நிறைவேற்றி விட்டால், பன்னீரின் அரசியலே அஸ்தமனமாகிவிடும். அதனால். அந்த புள்ளியை நோக்கி எடப்பாடியும் நெருங்கி கொண்டிருக்கிறார்.

தினகரன் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவுக்கு எடப்பாடி வந்து விடுவார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிப்பது போல, ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைத்து விட்டால், விசாரணை என்ற பெயரில் சசிகலா குடும்பம் சிக்கலுக்கு ஆளாகும். அதை காரணம் காட்டி ஒட்டுமொத்த அரசியலை விட்டே அவர்களை ஒதுக்கி விடலாம்.

மறுபக்கம், பன்னீர் இதுநாள் வரை விதித்து வந்த இரு நிபந்தனையும் நிறைவேற்றப்பட்டு விட்டதால், இனி எதை சொல்லி ஊர், ஊராக சுற்று பயணம் செய்து கூட்டம் போடுவது? என்ற நிலையில் பன்னீரும் ஒதுங்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்.

அல்லது, வேறு வழியின்றி. தமக்கும், தமது ஆதரவாளர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இன்றி, தமது அணியை எடப்பாடி அணியுடன் இணைக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்படும்.

இதனால், பன்னீர் உள்பட அவரது அணியில் உள்ள அனைவரும், எடப்பாடியின் அதிரடி நடவடிக்கையால், கிறு கிறுத்து போயுள்ளனர்.

மேலும், சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் எடப்பாடி பலம் பெற்றுவிட கூடாது என்பதற்காக, அவர் ஸ்டாலினுடன் கூட்டு வைத்துள்ளார் என்று பன்னீர் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது.

சசிகலாவுக்கு எதிராக பன்னீர் உருவெடுத்தபோது, சசிகலா ஆதரவாளர்கள், ஸ்டாலினுடன் பன்னீர் கூட்டு வைத்து கொண்டு செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஆனால், அதே குற்றச்சாட்டை பன்னீர் தரப்பு எடப்பாடி மீது தற்போது முன்வைப்பது, எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை.