ஊழல் செய்யும் அமைச்சர்கள் எல்லாரும் எடப்பாடி அணியில் உள்ளதாகவும் எனவே அவர்களை சென்று நாங்கள் பார்த்தால் தொண்டர்கள் கொதித்து எழுந்து விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பல உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. எடப்பாடி அணியும் ஒ.பி.எஸ் அணியும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு இடையே தற்போது தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

எடப்பாடி அணியில் 7 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு ஒ.பி.எஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஒ.பி.எஸ் தரப்பிலும் குழு முடிவு செய்யப்பட உள்ளதாக ஒ.பி.எஸ் அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என தொண்டர்கள் மற்றும் அமைச்சர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர் பொன்னையன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

சசிகலாவிடம் நான் எந்த பொறுப்பும் கேட்கவில்லை. சசிகலா உயிரோடு தான் இருக்கிறார். அவரிடமே நீங்கள் கேளுங்கள். என்னுடைய பதிலுக்கு அவர் மறுப்பு சொல்லமாட்டார் என நம்புகிறேன்.  

செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்பு எனக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதா கொடுத்தது. இதை தவிர எனக்கு எந்த பொறுப்பும் நீங்களே வாங்கி தந்தாலும் எனக்கு வேண்டாம்.

சசிகலா மேல் எனக்கு எந்த பாசமும் இல்லை. அவர் மேல் பாசம் எப்படி இருக்க முடியும். பாசம் என்பது தவறான வார்த்தை.

அம்மாவின் சாவுக்கு காரணம் அவர்தான் என்று சந்தேகம் எழுந்தவுடன் தான் நான் அவரை விட்டு பிரிந்து வந்தேன்.

சசிகலாவின் அரசியல், திறமையின் மேல் மதிப்பு உள்ளது. அதற்காக அவரை திரும்ப தலைவராக ஏற்றுகொள்ள முடியாது.

மேலும் தினகரன் மட்டுமே குடும்பம் கிடையாது. கட்சியில் நீக்கப்பட்ட 16 பேர் உள்ளனர். அனைவரையும் நீக்க வேண்டும்.

தொண்டர்கள் விருப்பபடி கட்சி அதிகாரம் யார் கைக்கு வரவேண்டுமோ அவ்வாறு வரும்.

இரு அணிகள் இணைவது குறித்து பொதுக்குழு தான் முடிவு எடுக்கவேண்டும். ஆளாளுக்கு பேச கூடாது.

இந்த பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் பதவியை நாங்கள் கேட்க மாட்டோம்.

கட்சி ஒண்ணா சேரனும் , இரட்டை இலை எங்களிடையே வரணும்.

பா.ஜ.க அரசுடன் எவ்வித தொடர்பும் இல்லை. ஊழல் செய்யும் அமைச்சர்கள் எல்லாரும் எடப்பாடி அணியில் உள்ளனர்.

எனவே அவர்களை சென்று நாங்கள் பார்த்தால் தொண்டர்கள் கொதித்து எழுந்து விடுவார்கள்.

வேண்டும் என்றால் அவர்கள் வரட்டும். பேசுவோம். முடிவெடுப்போம்.

இவ்வாறு கூறினார்.