அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த சென்றதால்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டப விழாவில் கலந்து கொண்ட பிறகு, சென்னை விமான நிலையம் திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த சென்றதால்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராடி வருவதாக கூறினார். 

அரசுக்கு தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்துவோர் மீதுதான் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.,