ஓபிஎஸ் முகத்தை டாராக கிழித்து எடப்பாடி ஆதரவாளர்கள் அட்ராசிட்டி.. அலறி அடித்து புது பேனர் வைத்த தலைமை கழகம்...
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்ட நிலையில் தலைமைக் கழகம் சார்பில் அதே இடத்தில் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்ட நிலையில் தலைமைக் கழகம் சார்பில் அதே இடத்தில் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. நடந்து முடிந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமித்துவிட வேண்டும் என அவர், அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் எந்த புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என நீதிமன்றம் இட்ட உத்தரவு அதற்கு தடையாக அமைந்து விட்டது. இதனால் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூடிய வேகத்திலேயே கலைந்துவிட்டது. அதில் ஓபிஎஸ்சை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் நடந்து கொண்டனர். அவரை வெளியே போகச் சொல்லி முழக்கம் எழுப்பிது முதல் அவர் வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசியது வரை பல அட்ராசிட்டி சம்பவர்கள் அரங்கேறியது.
இதையும் படியுங்கள்: அதிமுகவில் சாதி அரசியல்..எடப்பாடி பழனிசாமி யார் தெரியுமா? ஓபிஎஸ்சை விளாசிய அதிமுக பிரமுகர்!
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும் பாராமல் அவரை அவமதிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது, அதைத்தொடர்ச்சியாக ஓபிஎஸ் இபிஎஸ் அணியினர் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் வரும் 11ம் தேதி பொதுக்குழு நடந்தே தீரும் என்றும் அதில் எடப்பாடிபழனிசாமி பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் 11ம் தேதி பொதுக்குழு நடக்காது என்றும், ஒருங்கிணைப்பாளரின் கையொப்பம் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: பொது குழுவுக்கு பிறகு ஓபிஎஸ் செல்வாக்கு எகிறுகிறது.. எடப்பாடி முகாமை கதறவிடும் வைத்தியலிங்கம்.
இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, அக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை, இந்நிலையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஓபிஎஸ் அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார், துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம், எந்த ஒரு அதிமுக தொண்டரும் திமுகவுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைகீழாக மாறி விட்டார்.
கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைக்கு இணங்க இந்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது என்றார். இதில் தலைமை கழக நிர்வாகிகள் 65 பேர் கலந்து கொண்டனர் 4 பேர் மட்டுமே வர முடியாது என கடிதம் கொடுத்துள்ளனர் என்றார். அவரைத் தொடர்ந்து இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், இந்த கூட்டம் சட்டரீதியாக நடைபெற்றது இது சட்டரீதியாக செல்லும் என்றார். அப்போது அங்கு குழுமியிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் இருப்பதைக்கண்டு வெறுப்படைந்தனர். உடனே தடுப்பு சுவற்றின் மீது ஏறி பேனரில் இருந்த ஓபிஎஸ் இன் புகைப்படத்தைக் கிழித்தனர்.
அதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது, இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களின் இந்த செயலை பலரும் கண்டித்து வந்தனர். உடனே இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் விரைவில் அந்த பேனர் அகற்றப்பட்டு புதிய பேனர் வைக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் ஏற்கனவே இருந்ததை போன்ற புதிய பேனர் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என அடிக்கடி மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பெருமிதம் கொள்வது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட ஒரு இயக்கம் அரசியல் காரணங்களுக்காக பிளவு பட்டு நிற்பதுடன், சில நேரங்களில் கடுமையாக மோதிக் கொள்வதும் இதுபோன்ற பேனர் கிழிப்பு, வரம்பு மீறிய அவமரியாதை போன்ற செயல்களில் ஈடுபடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.