அமைச்சருக்கு வாய் மட்டும்தான்.. விடியா அரசின் கொடுமைகள்.! திமுகவை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி

விடியா திமுக ஆட்சியாளர்களுக்கு, வாக்களித்த பாவத்திற்காக அப்பாவி தமிழக மக்கள் புதை குழிக்குள் செல்லும் கொடுமை அரங்கேறி வருகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.   

Edappadi Palaniswami slams DMK government

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “"பேய்க்கு வாக்கப்பட்டால், முருங்கை மரத்தில்தான் குடியிருக்க வேண்டும்"என்பதற்கேற்ப இந்த விடியா திமுக ஆட்சியாளர்களுக்கு, வாக்களித்த பாவத்திற்காக அப்பாவி தமிழக மக்கள் புதை குழிக்குள் செல்லும் கொடுமை அரங்கேறி வருகிறது.

தங்களின் இன்னுயிரைக் காப்பார்கள் என்ற நம்பிக்கையோடு, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய மக்கள் அலட்சியமாக நடத்தப்படுவதும்; முறையாக சிகிச்சை அளிக்கப்படாததும், போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருந்துகள் இல்லாததாலும், தமிழக மருத்துவத் துறையின் பெருமை, இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டுகால ஆட்சியில் தலைநிமிர்ந்து நின்ற தமிழக மருத்துவத் துறை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பொம்மை முதலமைச்சரின் பரிபாலனத்தில் தலைகுனிந்து நிற்கிறது. சமூக வலைதளங்கள் எல்லாம் முதலமைச்சரைத்தான் 'பொம்மை' என்று வர்ணிக்கும் வேளையில், அவரைப் போலவே சுகாதாரத் துறை மந்திரி திரு. மா. சுப்பிரமணியமும் போட்டிபோட்டு நடிப்பது கேவலமாகும்.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. தஸ்தகீர்-திருமதி அஜிஸா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல் நலம் தேறி வந்த நிலையில், 29.6.2023 அன்று குழந்தையின் வலது கையில் 'ட்ரிப்ஸ்' மூலம் மருந்து செலுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து செவிலியர்களிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami slams DMK government

சூடுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 300 ஊழியர்களுக்கு குறி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை, குழந்தை முகம்மது மகிரின் தாயார் திருமதி அஜிஸா கூறும்போது 'அவங்க தப்பா போட்ட ஒரு ஊசியால் என் குழந்தை கையை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால்தான் என் குழந்தையின் கை அழுகியது; குழந்தையின் விரல் கருப்பாக மாறும்போதே செவிலியர்களிடம் பலமுறை சொன்னேன். யாரும் கண்டுகொள்ளவில்லை.

பலமுறை செவிலியர்களின் அலட்சியத்தால்தான் என்னுடைய குழந்தையின் கை போனது. என்னுடைய குழந்தைக்கு நடந்தது போல் எந்த குழந்தைக்கும் நடக்கக் கூடாது' என்று கண்ணீர் மல்க அழுதபடி புலம்பினார்.மறுநாள், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வலது கை அழுகிவிட்டதால் தோள்பட்டை வரை கையை அகற்ற வேண்டுமென்று தீர்மானித்து தொடர் சிகிச்சைக்காக அக்குழந்தை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குழந்தையின் கை அகற்றப்பட்டதாகத் தெரிய வருகிறது.

இந்த விடியா திமுக ஆட்சியில், அரசு மருத்துவமனைகளின் தரம் குறைந்துள்ளதும், ஆட்சியாளர்களைப் போலவே மருத்துவப் பணியாளர்களும் அலட்சியமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடுவதும் புதிதல்ல. பிறந்ததில் இருந்தே முகமது மகிர் பல்வேறு இடற்பாடுகளில் (Complication) இருந்ததாக சுகாதாரத் துறை மந்திரி திரு. மா. சுப்பிரமணியம் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். அந்தக் குழந்தை பிறந்தது முதல் இவர்தான் அதற்கு வைத்தியம் பார்த்ததுபோல் கருத்து தெரிவித்திருப்பது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த குழந்தைச் சம்பவம் விடியா ஆட்சியில் முதல் முறை அல்ல.

சென்னை, வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரு. ரவி என்பவரின் 17 வயது மகளும், கால்பந்து வீராங்கனையுமான கல்லூரி மாணவி பிரியா, கால் தசை பிடிப்புக்காக பெரியார் நகர் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைக்காக சென்ற போது, அரசு மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தாலும், கவனக் குறைவாலும் அவரது வலது காலை இழந்ததோடு, அவரது உயிரையும் பறிகொடுத்தது இன்னும் தமிழக மக்களின் மனதில் இருந்து அகலவில்லை.

சென்னை, ஒட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த திரு. கோதண்டபாணி அவர்களின் 7 வயது பெண் குழந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால், வலது கால் ஊனம் ஏற்பட்டதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தலைமைச் செயலகத்தில் தனது மகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவலமும் நடந்தேறியது.

அம்மா உணவகம்: ஏழை மக்கள் 3 வேலை சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்கலையா.? திமுகவை வெளுக்கும் இபிஎஸ்

Edappadi Palaniswami slams DMK government

கடந்த ஜூன் மாதம் கடலூர் மாவட்டம், கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரு. கருணாகரன், சளி தொல்லையால் அவதியுற்ற தனது மகள் சாதனாவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் சளிக்கு ஊசி போடுவதற்கு பதிலாக, இரண்டு நாய் கடி ஊசியைப் போட்டு மயக்கமுற்ற நிலையில் தற்போது சாதனா மேல்சிகிச்சை பெற்றுவரும் அவலமும் நடந்தேறியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த மந்திரியின் செயல்பாடுகளால் புதிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகூட தமிழகத்திற்கு வரவில்லை. பழமை வாய்ந்த சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை சீரமைக்காத இந்த விடியா திமுக அரசின் அலட்சியத்தால், இந்த ஆண்டு 500 MBBS இடங்களை இழக்கும் கேவலம் ஏற்பட்டது.

அம்மாவின் ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டன; உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன; மருத்துவ உபகரணங்கள், MRI ஸ்கேன் போன்ற அனைத்து உபகரணங்களும் பல கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வாய்வீரம் பேசும் இந்த மந்திரி, என்ன காரணத்தினாலோ இதுவரை முறையாக மருந்துகளை, தமிழ் நாடு மருத்துவக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யாமல், உள்ளூர் கொள்முதல் மட்டுமே செய்வதாக செய்திகள் வருகின்றன.

இவ்வளவு பிரச்சனைகள் மருத்துவத் துறையில் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக் காட்டும் தவறுகளை, குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எண் ணம் மந்திரி மா. சுப்பிரமணியத்திற்கு கிஞ்சித்தும் இல்லை. அதற்கு பதில், இவர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பூசி மொழுகுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். துறை மீது கவனம் செலுத்தாத ஒரு நபர் சுகாதாரத் துறைக்கு மந்திரியாக இருப்பது தமிழக மக்களின் தலையெழுத்து.

விடியா திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும்; எதிர்காலத்தை இழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும்; தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.அரசு மருத்துவமனையையே நம்பி இருக்கும் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதை இந்த விடியா திமுக அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios