கர்நாடக மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் வரும் பரப்பன அக்ரஹார சிறையின் சட்டங்களும், பெங்களுரு நீதிமன்றத்தின் ’பரோல் விதிகளும்’ எந்த வகையிலும் தன்னை கட்டுப்படுத்தாது என்று சசிகலா மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறார்!...என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கணவர் நடராசனின் இறப்புக்கு சென்று வருவதற்காக சசிக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியபோது ’அரசியல் கட்சியினரை சந்திக்க கூடாது, மீடியாவுக்கு பேட்டி கொடுக்க கூடாது.’ என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

ஆனால் இவை எதுவும் சசியை கட்டுப்படுத்தாது போல. மார்ச் 21-ம் தேதியன்று நடராஜனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின் மெது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார் சசிகலா. நடராஜனின் வீட்டில் ஜெயலலிதாவின் போட்டோ இல்லாத நிலையில், ‘அக்காவோட போட்டோ ஒண்ணை மாட்டுங்க.’ என்று சொல்லி மாட்ட வைத்து ஆசை தீர பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நடராசன் மரணத்தை முன்னிட்டு துக்கம் விசாரிக்கவும், சசிக்கு ஆறுதல் தெரிவிக்கவும் பல தளங்களை சேர்ந்த வி.வி.ஐ.பி.க்கள் நடராசனின் இல்லத்துக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் கட்சிக்காரர்களும் அடங்கும்.

தி.மு.க. சார்பாக டெல்டா பகுதியை சேர்ந்தவரும், அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவருமான எல்.ஜி. என்றழைக்கப்படும் எல்.கணேசன் சசியை சந்தித்தார். பொதுவாக தன்னை சந்திக்க வருபவர்களை வீட்டின் கீழ் தளத்திலிருக்கும் பெரிய அறையில் சந்திப்பதுதான் சசியின் வழக்கமாக இருக்கிறது.

ஆனால் எல்.ஜி. மட்டும் மாடியில் உள்ள சசியின் அறையிலேயே சந்திக்க வைத்திருக்கிறார் தினகரன். எல்லாமே தினாவின் கண்ணசைவில்தான் நடக்கிறது. ஆறுதல் சொல்ல வந்த எல்.ஜி. அரசியல் ரீதியில் எதுவும் பேசவில்லை என்று எப்படி நம்புவது?

என்கின்றனர் அ.தி.மு.க.வினர். ஆளும் அ.தி.மு.க. அணிக்கு  சம தூரத்திலுள்ள எதிரிகளாக தி.மு.க. மற்றும் தினகரன் கட்சி என இரண்டுமே உள்ளது. ஒருவேளை ஒன்று சேர்ந்து பழனிசாமியின் ஆட்சியை காவு வாங்க திட்டமிடப்பட்டதோ!? எனும் சந்தேகங்களையும் சிலர் எழுப்புகிறார்கள்.

இந்நிலையில் இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அது கடந்த 24-ம் தேதியன்று பிற்பகலில் நடராசன் வீட்டுக்கு ஒரு கார் வந்தது. மற்ற கார்களை வீட்டின் வெளியே நிறுத்துபவர்கள் இந்த காரை மட்டும் உள்ளேயே அனுமதித்தனர்.

TN 06 D 9090 என்ற பதிவெண் உடைய, G - என அரசாங்க வாகனம் என்பதை காட்டும் சிவப்பு எழுத்து பொறிக்கப்பட்ட கார் அது. அந்த காரில் வந்த நபரோ அல்லது நபர்களோ சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

அந்த காரின் உள்ளே இருந்தவர்கள் வெளியில் நின்றவர்களின் கண்ணில் படாதபடி காரினுள் பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அரசு காரில் இப்படி வந்து சென்றவர் எடப்பாடியின் தூதுவரே! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏன் வந்தார்? எனும் கேள்விக்கு, “நன்றாக கவனியுங்கள், என்னதான் சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைத்துவிட்டாலும் தினகரனைதான் தாறுமாறாக அமைச்சர்கள் திட்டுகிறார்களே தவிர, சசியை பெரிதாய் விமர்சிப்பதில்லை.

காரணம் சசி மீது பயமும், மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது. சசியை கட்சியில் ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறது எடப்பாடியின் அணி. இதற்காக பன்னீரை கழட்டிவிடவும் தயாராய் இருக்கிறார்கள்.

இப்படியொரு முடிவை எடுக்க காரணம், ஆட்சி சந்திக்கும் அவப்பெயர்களும், தினகரனுக்கான செல்வாக்கு உயர்ந்து கொண்டே போவதும், எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா இருவரும் கட்டிக் காத்த இரட்டை இலை சின்னத்தை தினகரனின் குக்கர் சின்னம் மோசமாக தோற்கடித்ததையும் எடப்பாடி டீமினால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால்தான் இந்த இணைப்புக்கோ அல்லது சசிக்கு ஆதரவான வெளிப்படையான நிலை எடுக்கவோ சந்தித்திருக்கிறார்கள்.” என்கிறார்கள் விமர்சகர்களில் ஒரு தரப்பினர்.

ஆனால் இன்னொரு தரப்பு விமர்சகர்களோ “தஞ்சாவூரில் சசியை சந்திக்கும் நபர்களுக்கு அனுமதி வழங்குவதே தினகரன் தான். ஆக அவரை தாண்டி சென்று சசிகலாவிடம் தினகரனுக்கு எதிரான லாபியை எடப்பாடி அணியால் செய்திட முடியாது. எனவே எடப்பாடி அணி, தினகரனை மட்டும் வெறுக்கிறது! என்பது தவறான வாதம்.

எடப்பாடியின் ஒற்றனோ அல்லது ஒற்றர்களோ சசிகலாவை அந்த காரில் சென்று சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளிட்ட சில விஷயங்கள் பற்றி சந்திப்பே என்று தெரிகிறது.

எது எப்படியானாலும் அந்த காரில் சென்றவர்கள் சசியுடன் செய்த மர்ம ஆலோசனையானது பன்னீர் அணிக்கு கிலி கிளப்பும் சந்திப்புதான். இந்த சந்திப்பின் விளைவுகள் இன்னும் சில நாட்களில் வெளிப்படும்.” என்கிறார்கள்.
காத்திருப்போம், கவனிப்போம்!