ரிட்டயர்டு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்தது. ஆனால் இவர் இந்த பிரிவில், இந்த பதவியில் தொடர்வது சில அதிகார மையங்களுக்கு பிடிக்கவில்லை. விருப்பமில்லை என்பதைவிட, எதையோ நினைத்து சிலர் அஞ்சுகிறார்கள். இதனால் பொன்.மா.வுக்கு எதிராக என்னென்ன குடைச்சல்களை தர முடியுமோ அதெல்லாம் தரப்படுகிறது. 

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.க்கு கீழே பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் சிலரும், போலீஸ்காரர்கள் சிலரும் சமீபத்தில் டி.ஜி.பி.யிடம் அவர் மீது சில புகார்களை சொல்லி மனு அளித்தனர். இதன் மூலம் பொதுமக்கள் மனதில் பொ.மா. மீது அவப்பெயர் ஏற்படும் என நினைத்தனர். ஆனால் அது நமத்துப் போன புஸ்வானமாகிவிட்டது. அதோடு மட்டுமில்லாமல் பொ.மா.வுக்கு ஆதரவாக தமிழக போலீஸ் வட்டாரத்திலேயே பெரும் படை ஒன்று பெருகி வருவது ஆச்சரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 

அதாவது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்த 125 பேரை அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களுக்கு ஐ.ஜி. அனுப்பிவிட்டார். ஆனால் அதில் 88 பேர் நாங்கள் மறுபடியும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில்தான் பணிபுரிவோம் என அடம் பிடிக்கின்றனராம். இதுமட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த சுமார் நானூறு போலீஸார் பொ.மா. தலைமையின் கீழ் பணியாற்ற விருப்பம் தெரிவித்து ‘சார், ப்ளீஸ் என்னை உங்க துறைக்கு எடுத்துக்கோங்க.’ என்று விருப்ப மெயில் அனுப்பி, கெஞ்சுகின்றனராம். இதெல்லாம் பொ.மா.வை நெகிழ வைத்துள்ளது.

இந்த நிலையி, அதிரடி அதிகாரி பொன்.மாணிக்கவேல்லுக்கு ஆதரவாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை அத்தனை பேரும் அடங்கிய டீமை ‘பி.எம்.வி. ஆர்மி’ என்று செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர் போலீஸ் துறையில். இதெல்லாம் ஆட்சி மேலிடத்தை கடும் கடுப்புக்கு ஆளாக்கியிருக்கிறது. டி.ஜி.பி. வரை இதை புகாராக கொண்டு போயாகிவிட்டது. அவரே நினைத்தும் கூட பொ.மா.வுக்கு ஆதரவாக எழும் அலையை அடக்க முடியவில்லையாம். 

இந்நிலையில், பொன்.மாணிக்க வேலை ‘தினகரனின் ஆள்’ என்று அரசியல் முத்திரை குத்தி சிலர் விமர்சித்து வந்தனர். அவர்கள் இப்போது இயலாமையில் ‘பி.எம்.வி. ஆர்மி-ங்கிறதுக்கு பின்னணியில் இருக்குறது தினகரன் தான். அவர்தான் போலீஸ் துறையில் சாதி ரீதியில் சிலரை வளைத்து ஒரு டீமை உருவாக்கி அரசாங்கத்துக்கு எதிரான குடைச்சலை கொடுக்கிறார். பொன்.மாணிக்கவேலும் இதற்கு உடந்தை.’என்று குமுறியிருக்கிறார்கள். ஆஸம்!