அமித் ஷாவை சந்தித்து பேசிய பிறகும் பிரச்சனை தீராத காரணத்தினால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து டென்சனிலேயே இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அன்று இரவு பத்து மணிக்கு மேல் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏனென்றால் டெல்லி எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த அதிருப்தியை சரி செய்யவே எடப்பாடி டெல்லியில் நாள் முழுவதும் முகாமிட்டிருந்தார் என்றும் சொல்லப்பட்டது.  

அந்த வகையில் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே எடப்பாடி – அமித் ஷா சந்திப்பு நடைபெற்றுள்ளது. முதலில் அரசுப் பணிகள் பற்றியே அமித் ஷா எடப்பாடியிடம் பேசியுள்ளார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அமித் ஷா கூறுவதை டிரான்ஸ்லேட் செய்துள்ளார். இதே போல் எடப்பாடி பேசுவதையும் அவர் தான் டிரான்ஸ்லேட் செய்துள்ளார். 

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் உடனடியாக செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பது தான் அமித் ஷாவின் ஒட்டு மொத்த விருப்பமாக இருந்துள்ளது. அதற்கு நிச்சயமாக ஆவண செய்வதாக எடப்பாடி கூறியுள்ளார். இதேபோல் தமிழகத்தின் தேவைகள் என்று ஒரு பட்டியலை எடப்பாடி உள்துறை அமைச்சரிடம் கொடுத்துள்ளார். 

10 நிமிடங்களில் அரசு ரீதியிலான பேச்சு முடிந்த பிறகு அரசியல் ரீதியிலான பேச்சு துவங்கியுள்ளது. அப்போது எடப்பாடி எதுவுமே பேசவில்லை என்கிறார்கள். அமித் ஷா கடகடவென ஆரம்பித்து விறுவிறுவென முடித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் சூழல் பாஜகவிற்கு சாதகமாக இல்லை. அதிமுகவை மிகவும் நம்பினோம் ஆனால் தேர்தலில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது எங்களுக்கு தெரியும் அதற்கு ஏற்றது போல் தான் இனி எங்களின் அரசியல் தமிழகத்தில் இருக்கும் என்கிற ரீதியில் அமித் ஷா பேசியதாக சொல்கிறார்கள். எதையும் வெளிப்படையாக அமித் ஷா கூறவில்லை என்றாலும் எடப்பாடி மீதான அதிருப்தி நீங்கும் வகையில் எந்த வார்த்தையும் அமித் ஷா வெளியிடவில்லை என்கிறார்கள். 

இதனால் சென்ற காரியம் சுபம் ஆகவில்லை என்று கடுப்பில் தான் எடப்பாடி வெளியே வந்துள்ளார். பிறகு மறுநாள் செய்தியாளர்களிடம் பேசிய போது எடப்பாடி எந்த அளவிற்கு கடுப்பாக இருந்தார் என்பது அவரது அந்த பேட்டியை பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இதற்கிடையே டெல்லியில் இது தொடர்பாக விசாரித்த போது முதலமைச்சர் பதவியை மட்டும் எடப்பாடியை கவனித்துக் கொள்ளுமாறும், அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழிவிடுமாறு பேச்சுகள் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.