Edappadi palanisamy supports rajinikanth kaala
“ஊரெல்லாம் காலா ஃபீவராக இருக்கு. நான் சொல்லப்போவதும் காலா சமாச்சாரம்தான்! தமிழ்நாடு முழுக்க இன்று காலா படம் ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால், இன்று காலை வரை முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் “காலா” ரிலீஸுக்கு எந்த அறிகுறியும் இல்லை. எடப்பாடியில் நான்கு தியேட்டர்கள் தான் இருக்கின்றன. புதிய படங்கள் தொடர்ந்து இங்கே ரிலீஸ் செய்யப்பட்டாலும், “காலா” ரிலீஸ் பற்றி எடப்பாடியில் எங்கேயும் போஸ்டர்கள் இல்லை. ரசிகர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தியேட்டர்காரர்களோ, ‘ரேட் கட்டுப்படியாகாது. அதனால் படத்தை எடுக்கலை...’ என்று சொல்லி வந்தனர்.
ஆனா, மேட்டரோ அதுவல்ல, ‘காலா படம் தமிழக அரசை விமர்சனம் செய்வது போல இருக்கிறது. அதை நம்ம ஊரில் ஓடவிட்டால் நமக்குதான் அசிங்கம், அது நம்ம ஊரிலிருந்து முதவராக இருக்கும் உங்களுக்குத்தான் என சிலர் முதல்வர் பழனிசாமியிடம் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் இல்லாமல், எடப்பாடியில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரோ, “காலா” படத்தை இங்கே எவனும் ரிலீஸ் செய்யக் கூடாது. மீறி செஞ்சீங்கன்னா அண்ணன் (முதல்வர்) கோபத்துக்கு ஆளாயிடுவீங்க...’ என்று தியேட்டர் உரிமையாளர்களைச் மிரட்டியிருக்கிறார்கள். அதன் பிறகு தியேட்டர் ஓனர்கள் யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையாம்.

தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான ஊர்களில் எடப்பாடியில் மட்டும்தான் இன்று ரிலீஸ் இல்லை என்பது படத்தின் தயாரிப்பாளரான மருமகனிடம் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர் தியேட்டர்காரர்களுடன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவர்கள் ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தை சொல்ல... மருமகன் உடனடியாக இந்த விஷயத்தை மாமனாரின் கவனத்துக்கு கொண்டு போனாராம். ‘நான் பேசுறேன்...’ என்று சொன்ன மாமனார், உடனடியாக அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பது எந்த விதத்திலும் நியாயம்? படத்துல ஆளுங்கட்சியை, குறிப்பாக அதிமுகவை எந்த இடத்திலும் நாங்க எதையும் பேசல. நீங்க யாரு வேண்டுமானாலும் தாராளமாக படம் பாருங்க. ரிலீஸுக்கு முன்பே முதல் மந்திரி பாக்கனும்னாலும் ஷோவுக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன். அதைவிட்டுட்டு, படம் பார்க்காமலேயே நீங்க தடுக்கிறது எப்படி சரியாகும்..’ என கோபமாக கேட்டாராம் கரிகாலன்.
அதற்கு அந்த மந்திரியோ, அய்யய்யோ ’நாங்க எங்கேயும் தடுக்கவில்லையே...’ என பதரியடிசிகிட்டு சொன்னாராம்.... ‘CM. மோட சொந்த ஊர் எடப்பாடியில தடுத்திருக்காங்க. இன்னும் அங்கே படம் போடலை...’ என கரிகாலன் சொல்ல. ’நான் இதை என்னன்னு உடனே விசாரிக்கிறேன்..’ என்று சொன்ன மந்திரி, இந்த விஷயத்தை முதல் மந்திரியிடம் கொண்டு போயிருக்கிறார்.

‘நான் யாரையும் படத்தை போட வேண்டாம்னு சொல்லவே இல்லையே... யாரு மிரட்டினாங்கன்னு நான் உடனே கேட்கிறேன்..’ என்று சொன்னாராம் முதல் மந்திரி. அத்துடன் உடனே எடப்பாடியில் உள்ள அதிமுக நகர செயலாளரை போனில் பிடித்து செமையா டோஸ் விட்டாராம். ‘என்னை கேட்காம நீங்க எப்படி இப்படி செய்யலாம்? இருக்கிற பிரச்னை போதாதுன்னு எனக்கு ஆளாளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா? நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. எடப்பாடியில் “காலா” படம் எல்லா ஊரைப் போலவே ரிலீஸ் ஆகனும்..’ என கோபத்துடன் கத்தினாராம் முதல் மந்திரி.

அதன் பிறகு எடப்பாடி நகர செயலாளர் எடப்பாடியில் உள்ள தியேட்டர் ஒனர்களை தனித்தனியாக வீட்டிற்க்கே சென்று, ‘நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க...’ என சொல்ல... தியேட்டர்காரர்களோ, ‘இதுக்கு மேல எங்கே போய் ரிலீஸ் பண்றது... நாங்க பண்ணவே இல்ல. ஓடுற படமே ஓடட்டும்..’ என சொல்லி பின் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அதிமுகவினரோ, ‘எப்படியாவது காலையில் படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இல்லைன்னா எங்களுக்கு பெரிய சிக்கல் ஆகிடும்.. என்ன உதவியானாலும் செய்ய ரயாராக இருக்கோம்..’ என்று கெஞ்சி பட ரிலீஸுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதிமுகவினரின் இந்த செயலால் அவசர அவரசமாக நேற்று அதிகாலையிலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு படம் ரிலீஸ் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனதாம்.
