பொங்கல் பரிசு வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா சூழலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். நான் முதல்வரானதில் இருந்து ஊழல் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கடுகளவும் ஸ்டாலினுக்கு எண்ணமில்லை. 

தமிழகத்தில் தொழில் தொடங்க விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோரை ரத்தின கம்பளம் கொண்டு வரவேற்போம். திமுக ஆட்சிக்காலத்தில் தான் டெண்டர்கள் விட்டதில் தில்லுமுல்லுகள் நடைபெற்றுள்ளன. புதிய தலைமைச்செயலகம் கட்ட ரூ.200 கோடிக்கு கணக்கு போட்டுவிட்டு ரூ.425 கோடி தந்தார்கள். ஆற்காடு - திருவாரூர், நாகை - கட்டுமாவடி, ராமநாதபுரம் - தூத்துக்குடி வரை சாலை அமைத்ததில்  முறைகேடு அரங்கேறியுள்ளது. 

திமுக ஆட்சிக் காலத்தை போன்று டெண்டர் இப்போது இல்லை. தற்போது இ- டெண்டர் விடுப்படுகிறது. இ- டெண்டர் முறையில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினால் குற்றம்சாட்டப்பட்டவர்கள், திமுக ஆட்சியலும் டெண்டர் எடுத்தவர்கள்தான். பொய்யான தகவலை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை திமுக தேடுகிறது. ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.