நீடாமங்கலத்தில் தன்னை வரவேற்ற விவசாயிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆர்வமாக சேர்ந்துக் கொண்டு வேட்டியை மடிச்சுகட்டி சேற்றில்  இறங்கி நடவு நட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கி வைக்க நீடாமங்கலம் வழியாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நீடாமங்கலம் அடுத்த கொண்டையாறு கிராமத்தில் வயலில் பெண்கள் நாற்று நட்டு கொண்டிருப்பதை பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக காரை நிறுத்த சொன்னார். பின்னர் காரை விட்டு இறங்கி அந்த வயலுக்கு நடந்து சென்றார்.

முதல்வரை பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து, முதல்வர் வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கி நாற்று நட்டார். மேலும் விவசாய வேலைகளை செய்தார். இதனை பார்த்த பெண்கள், எங்களுக்கு விவசாயி முதல்வராக கிடைத்திருப்பதற்கு பெருமை கொள்கிறோம். உங்களால் விவசாயத்துக்கு பெருமை என்று முதல்வரிடம் மகிழ்ச்சி பொங்க கூறினார்கள். மேலும், விவசாயிகள் மத்திய பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்போதும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.