தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்தார். மேலும் மதுரையில் உள்ள சிறப்புகளை பட்டியலிட்டும் தலைநகர கோரிக்கையை முன்வைத்தார். மதுரையைச் சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூவும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையை  தலைநகராக்க விரும்பினார் என்று தெரிவித்தார்.
ஆனால்,  திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சியை தலை நகராக்க மாற்ற வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு என்றும் தலை நகராவதற்குரிய தகுதிகள் திருச்சிக்கே இருப்பதாக கருத்து தெரிவித்தார். திருச்சிதான் தலைநகராக்கப்பட வேண்டும் என்று திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கே.என். நேரு, ட் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் ஆகியோரும் வலியுறுத்தினர். 
இதன் காரணமாக தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் திருச்சியா, மதுரையா என்ற பஞ்சாயத்து சமூக ஊடகங்களிலும் ஒலித்து வருகிறது. இந்நிலையில் வேலூருக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடன் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “இரண்டாம்  தலைநகர் குறித்த அமைச்சர்கள் பேசுவது அரசின் கருத்து அல்ல. அதெல்லாம் அவரவர்களின் தனிப்பட்ட கருத்துதான்” என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.