முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கியது நகைச்சுவையாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான இல.கணேசன் கூறியுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன், தாம்பரம் அருகே உள்ள பீர்க்கங்காரணையில் நடத்தப்பட்ட விநாயகர் சிலை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

இந்தநிகழ்வுக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கியது நகைச்சுவையாக உள்ளது. இது தெரு குழந்தைகள் விளையாட்டுபோல் உள்ளது.

அதிமுகவுக்கு மக்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வாக்களித்துள்ளனர். ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது.

ஒற்றுமையாக செயல்பட்டு 5 ஆண்டுகள் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஓ.பி.எஸ். இணைந்ததை மக்கள் வரவேற்கிறார்கள்.

தினகரன் அணி என கருதப்படுபவர்களால் வரும்பிரச்சனைகளை திறம்பட சந்திப்பார்கள் என கருதுகிறேன்.  திமுக எல்எல்ஏக்கள் ஆளுநரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி மனு கொடுத்துள்ளனர். அவர் நல்ல முடிவு எடுப்பார். நல்லதே நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.