- Home
- Politics
- லாட்டரி பணம் ரூ.1000 கோடியை கொட்டி முதல்வராக துடிக்கும் சார்லஸ்... புஷ்வாணமாகும் லஜக் கட்சி..!
லாட்டரி பணம் ரூ.1000 கோடியை கொட்டி முதல்வராக துடிக்கும் சார்லஸ்... புஷ்வாணமாகும் லஜக் கட்சி..!
இரவில் ஒரு பேச்சு, பகலில் இன்னொரு பேச்சு என்று ஜோஸ் சார்லஸ் இருப்பதால், அவரை சுற்றியிருந்த முக்கிய நபர்களும் தங்களுக்கு நாளை சிக்கல் வரும் என்று நினைத்து ஆளைவிடுங்க சாமி என்று கும்மிடுப்போட்டு கிளம்பத் தயாராகவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பணத்தை செலவழித்தால் முதல்வராக வந்துவிட முடியுமா..?
புதுச்சேரியில் தனது லட்சிய ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் களமிறங்கிய வேகத்திலேயே புஷ்வாணமாகி வருவதாக அதிர்ச்சி கிளப்புகிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாத்தினர்.
சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ரூ.1000 கோடியை லாட்டரி அதிபர் மகன் சார்லஸ் இறக்கி தேர்தலை சந்திக்க தயாராகி வந்தார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களை உள்ளடக்கிய 30 எம்எல்ஏ தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வாக்காளர்கள் வரை உள்ளனர். இங்கு எம்எல்ஏவாக வெற்றி பெற பெரிய கட்சிகளின் பின்புலமோ, மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்தவர்களோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
புதுவையை பொருத்தவரை தொகுதியில் மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவராகவும், எளிதில் அணுக கூடியவராகவும் இருக்க வேண்டும். அடுத்தது தான் கட்சியை பார்ப்பார்கள்.
தற்போதைய பாஜ அமைச்சராக உள்ள ஜான்குமார், லாட்டரி தடை செய்யப்படுவதற்கு முன்பு லாட்டரி வியாபாரியாக கொடிக்கட்டி பறந்தவர். அப்போது கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுடன் ஜான்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஜான்குமார், இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது மூன்றாவது முறையாக எம்எல்ஏவாகி பாஜகவில் அமைச்சராக உள்ளார். இவர், மார்ட்டின் குடும்பத்தில் உள்ள பழக்கத்தை பயன்படுத்தி, அவரது மகன் சார்லசிடம் ‘‘நீங்கள் மாநில, தேசிய கட்சிகளுக்கு பல கோடிகள் நன்கொடை கொடுத்து வருகிறீர்கள். நீங்கள் அரசியலுக்கு வந்து அந்த பணத்தை செலவழித்தால் முதல்வராக வந்துவிடலாம்.
ரூ.1000 கோடியில் திட்டம் போடும் சார்லஸ்..!
புதுவையில் உள்ள 30 தொகுதியிலும் குறைந்த வாக்காளர்கள்தான் உள்ளனர். நீங்கள் முதல்வராக வந்துவிட்டால் அதிகாரம் வந்துவிடும்’’ எனக்கூறி அவரை அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டார். பின்னர் சார்லஸ் ஜேசிஎம் மக்கள் இயக்கம் என ஆரம்பித்து, ஜான்குமார் தொகுதியான காமராஜர் தொகுதியில் தினமும் இலவச மதிய உணவு திட்டத்தையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சியாக மாற்றி புதுவையில் உள்ள 30 தொகுதியில் 15 தொகுதிகளை இலக்காக வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ அரசை ஊழல் அரசு என பேசி வருகிறார்.
இந்நிலையில் தனது சொந்த பணம் ரூ.100 கோடியை வங்கிகளில் டெபாசிட் செய்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழை பெண்களுக்கு ஓய்வூதியம், 6 சிலிண்டர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு கிட், மாணவின் தாய்க்கு ரூ.20 ஆயிரம், 10 கிராம் தங்க நாணயம் என பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் கணிசமான தொகை வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை வைத்து உள்ளாராம். ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.30 கோடிக்கு பல்வேறு திட்டங்கள் என ரூ. ஆயிரம் கோடியை செலவு செய்து வெற்றி பெற திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எடுத்தவுடனே ஹீரோவா?
இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை மாதிரியான கேரக்டேரெல்லாம் பண்ணமாட்டீங்களா? என்று ஒரு திரைப்படத்தில் கேட்பது போல கட்சி தொடங்கிய உடனே முதலமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். அரசியல் ஒன்றும் லாட்டரி சீட்டு விற்பது மாதிரி சாதாரணம் அல்ல. அது வியாபாரமும் அல்ல. ஏற்கனவே, புதுச்சேரி களத்தில் பழம் தின்று கொட்டைப்போட்டவர்கள் டஜன் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பணத்தை மட்டுமே பலமாக வைத்து வளைத்துப் போட்டுவிடலாம் என்று நினைத்து கொண்டிருந்த சார்லஸ்சின் எண்ணத்தில் கிலோ கணக்கில் மண் விழத் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள்.
தன்னுடைய கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்க, மாற்றுக் கட்சியான பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியில் உள்ள முக்கிய தலைக்கட்டுகளை விலைக் கொடுத்து வாங்க சார்லஸ் பேரம் பேசியிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் எல்லாம் சார்லஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நடிகர் விஜயின் தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவராக இருந்த சாமிநாதனிடம் சார்லஸ் தரப்பு பேசிவந்தது. அவர் பணத்தைவிட தனக்கு அரசியல் எதிர்காலம்தான் முக்கியம் என்று விஜயின் லேபிலில் இருக்கும் தவெகவில் சென்று இணைந்து இருக்கிறார்.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள ஜோஸ் சார்லஸ் தரப்பு, வரும் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக பரப்பிக்கொண்டு இருக்கிறது. ஆனால், தவெகவில் ஜோஸ் சார்லஸின் சொந்த மைட்துனரான ஆதவ் அர்ஜூனா தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இருவருக்கும் ஏழாம் பொறுத்தம். ஆதவ் அர்ஜூனா ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிபோல செயல்பட்டார் என்று ஜோஸ் சார்லஸே வெளிப்படையாக பேசிய நிலையில், ஆதவ் அர்ஜூனா இருக்கும்வரை ஜோஸ் சார்லஸை விஜயுடன் நெருக்கவே விடமாட்டார். இந்நிலையில், பணம் என்ற ஒரே ஆயுதத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஜோஸ் சார்லஸ் எப்படி புதுச்சேரி அரசியலில் களமிறங்கி, முதலமைச்சரும் ஆவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
தலைக்கு 15 கோடி ரூபாய் பேரம்..!
இது குறித்து நம்மிடம் பேசிய புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள், ‘‘முதலமைச்சர் கனவு காண்பது மட்டுமல்ல, புதுச்சேரியின் அடுத்த முதலமைச்சர் நான்தான் என சபதம் எடுத்துக் கொண்ட சார்லஸ், அரசியல் பிரமுகர்களை தம் பக்கம் இழுக்கும் வேலையை ஆரம்பித்தார். முதலில், சுயேட்சை எம்எல்ஏக்களான அங்காளன், சிவசங்கரன் ஆகியோரை வளைத்தார். இதனையடுத்து, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகளில் ஓரங்கட்டப்பட்ட, முடங்கிக் கிடக்கிற ஆட்களை இழுக்கும் வேலை நடந்தது. இதன் பின்னணியில் ஜான்குமார் இயங்கினார்.
இதற்காக நடந்த பேச்சுவார்த்தையில், "உங்களை நம்பி எப்படி எங்களின் அரசியல் வாழ்க்கையை தீர்மானிப்பது? எங்கள் கட்சியில் இன்றைக்கு நாங்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கலாம். ஆனால், நாளைக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு வராமலா போகும்?' என சார்லஸிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அதற்கு சார்லஸ், "என்னை நம்புங்கள். உங்களுக்கு எதிர்காலம் உண்டு' எனச்சொல்ல, "உங்களை நம்பி வரவேண்டுமானால், எங்களுக்கு 15 கோடி ரூபாய் கொடுங்கள். தேர்தல் செலவுகளுக்கு தனியாக தந்துவிட வேண்டும். இதற்கு ஓ.கே. எனில் உங்களை நம்பி வருகிறோம்' என சொல்ல, "அதை எலெக்ஷன் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு மாதம் 3 லட்சம் தர்றேன். அதை வெச்சு உங்க தொகுதியில தேர்தல் வேலையை பாருங்க' என 10 நபர்களிடம் தனித்தனியாகச் சொல்லியிருக்கிறார். அவர்களும் ஓகே எனச் சொல்ல, கடந்த 3 மாதங்களாக இந்தத்தொகை கொடுக்கப்பட்டு வந்தது.
மயக்கும் வார்த்தைகளுக்கு மசியாத அரசியல்வாதிகள்..!
இந்த நிலையில்தான், தனது மக்கள் மன்றமான ஜே.சி.எம். பெயரை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்தார் சார்லஸ். ஆனால், ஒரு நபரின் பெயர் கட்சியின் பெயராக இருப்பதால் அதை பதிவுசெய்ய மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் லட்சிய ஜனநாயக கட்சி எனும் பெயரில் கடந்த 14-ஆம் தேதி கட்சியை ஆரம்பித்தார் சார்லஸ். இது தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டதா? என தெரியவில்லை. ஐஜேகே கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒருவர், ல.ஜ.க. எனும் பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்திருப்பதாக அறிந்து அவரிடம் பேசி அதனை வாங்கிவிட்டார் சார்லஸ். ஆனால், இந்த லட்சிய ஜனநாயக கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதாகத் தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், சார்லஸையும் ஜான்குமாரையும் நம்பி வந்தவர்கள் ஏற்கனவே பேசியபடி 15 கோடியை தந்தால் மட்டுமே அடுத்த வேலையைப் பார்ப்போம் என அடம்பிடிக்க, ‘தேர்தல் வேலையை இப்போ பாருங்க. மத்ததை அப்புறம் பேசிக்கலாம். நான் எங்கே ஓடிப் போகப்போறேன்?' என்று மயக்கும் வார்த்தைகளில் பேச, அதை ஏற்க மறுத்து, இனி உங்களை நம்பி வரமாட்டோம் என விலகி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜான்குமாரை சந்தித்தும் அவர்கள் முறையிட, ‘எனக்கும் சார்லஸுக்குமே டேர்ம் சரியில்லை. நான் சொல்றதை எதையும் அவர் கேட்கமாட்டேங்கிறார். சார்லஸை நம்புறதும் நம்பாததும் உங்களுடைய சாய்ஸ். நம்புங்கள்னு நான் சொல்லமாட்டேன். எனக்கு எதுவும் தெரியாது. நீங்க ஏமாந்து போனீங்கன்னா என்னை வந்து எதுவும் கேட்கக்கூடாது' என ஜான்குமார் கைவிரிக்க, சார்லஸை நம்பிய ஆட்களெல்லாம், சார்லஸை நம்பிக்கைத் துரோகி என்று விமர்சித்து அவரைவிட்டு விலகி ஓடுகிறார்கள். கட்சி தொடங்கிய உடனே கட்டமைப்புக்காக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பலரும் சார்லஸின் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற செயல்பாடுகளில் அதிருப்தியாகி, இது சரிபட்டுவராது என்று நினைத்து, அவரவர் இருக்கும் கட்சியிலேயே இருக்கவும் அல்லது விஜய் உள்ளிட்ட முக்கிய முகங்கள் உள்ள கட்சியில் சேர்ந்து தேர்தலை சந்திக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், கட்சித் தொடங்குவதற்கு முன்னரே ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் சரிவை சந்தித்து வருகிறார்.
மண்ணாய்ப்போகும் ஜோஸ் சார்லஸின் கணவு.!
பணம் பத்தும் செய்யும் என்றாலும், தேர்தல் என்பதும், அரசியல் களம் என்பதும் வெறும் பணத்தை மட்டுமே வைத்து நிர்ணயிக்க முடியாதது. மக்கள் சக்தி என்பது, பணத்தை தாண்டி பதினொன்றையும் செய்ய வல்லது. அது தெரியாமல், பிறக்கும்போதே தங்கக் கரண்டியை கடித்துக்கொண்டு பிறந்த ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு களத்தியில் இறங்கத் துடிக்கிறார்.
இரவில் ஒரு பேச்சு, பகலில் இன்னொரு பேச்சு என்று ஜோஸ் சார்லஸ் இருப்பதால், அவரை சுற்றியிருந்த முக்கிய நபர்களும் தங்களுக்கு நாளை சிக்கல் வரும் என்று நினைத்து ஆளைவிடுங்க சாமி என்று கும்மிடுப்போட்டு கிளம்பத் தயாராகவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அவர் கட்சித் தொடங்கி தேர்தலை சந்திப்பதே அங்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது. நம்பிக்கைக்கும் நம்பகத் தன்மைக்கும் உரிய நபராக சார்லஸ் இருக்கவில்லை. இதனால், தம்மை விட்டு எல்லோரும் ஓடுவதைப் பார்த்து, கட்சியைத் தொடர்ந்து நடத்துவதா? இல்லை, கடையை மூடி விடுவதா? என்கிற குழப்பத்தில் இருக்கிறார் சார்லஸ்’’ என்கிறார்கள்.
