புலவர் சங்கரலிங்கத்தின் மகன் பூங்குன்றன்! என்றால் தமிழத்தில் பத்து பேருக்கு கூட தெரியாது. ஆனால், ’ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்’ என்றால் தேசம் கடந்தும் தெரியும். ஆம் ‘ஆண்களெல்லாம் நம்பத் தகுதியற்றவர்கள்’ எனும்  கருத்தை தன் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் கல்வெட்டாய் பதித்து வைத்திருந்த ஜெயலலிதா, பல ஆண்டுகள் ஒரு ஆணை நம்பி தன் நிழலாக நடக்கவிட்டார் என்றால் அது பூங்குன்றனைத்தான்.

 

போயஸ் இல்லத்திலும், பொது நிகழ்வுகளிலும் பிரதானமாய் நின்றோ, அமர்ந்தோ கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் இடது அல்லது வலது ஓரத்தில் மிக தள்ளி நின்று கொண்டிருக்கும் கேரக்டர்தான் பூங்குன்றன். பாடசாலையில் வேதம் கற்றுக் கொள்ளும்  இளைஞன் போல் தெய்வீக பரவசம் வீசும் முகம், கிட்டத்தட்ட இறுக்க வெட்டிய தலைமுடி, மிக மிக சாதாரண பேண்ட் ஷர்ட், கையில் லேப்டாப் பேக் அல்லது குறிப்பு கையேடுகள்! இவற்றை ஏந்தியபடி...ஜெயலலிதாவின் கண்ணசைவையே நோக்கிக் கொண்டிருப்பார். 

அம்மாவின் குறிப்பறிந்து மைக்ரோ செகண்டில் ரியாக்ட் செய்வார் பாருங்கள் அதனால்தான் ஜெயலலிதா எனும் சென்சிடீவ் குழந்தையின் கரங்களில், பூங்குன்றனால் பல காலம் பூனைக்குட்டியாய் இருக்க முடிந்தது. 

சரி விஷயத்துக்கு வருவோம்...இன்று ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவுநாள். இதையொட்டி தனது வருத்தங்கள், இரங்கல்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளை கொட்டி பாட்டாகவும், பேச்சாகவும் ஒரு வீடியோ மெசேஜை வெளியிட்டிருக்கிறார் பூங்குன்றன். ஜெயலலிதாவின் போட்டோ ஒன்றின் முன் நின்றபடி, பூங்குன்றன் எடுத்திருக்கும் அந்த செல்ஃபி வீடியோவில்...எடப்பாடி ஆட்சியை பிரித்து மேய்ந்திருக்கிறார் மனிதர்.

 

அதில் சில வரிகள்...”தொண்டர்கள்தான் என் உயிர் என்பாயே! அவர்களின் ‘வேதனை’யை போக்க நீ வரமாட்டாயா? நீ இருக்கிறாய் என்பதாலேயே பெண்கள் பயமின்றி வாழ்ந்தனரே!  பெண்களின் பயம் போக்க வரமாட்டாயா? மக்களால் நான், மக்களுக்காக நான் என்று சொன்னாயே! இந்த மக்களின் இடர் தீர்க்க வரமாட்டாயா? அம்மா நீ போனபோதே தமிழகத்தின் கம்பீரமும் போனதோ?” என்பதுதான் அவை. 

ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் நல்ல தலைமை இன்றி தவிக்கின்றனர், வேதனைப்படுகின்றனர் என்கிறது பூங்குன்றனின் வார்த்தைகள். ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறது அடுத்த வரி, மக்களுக்காக அரசாண்ட ஜெயலலிதா இல்லாத நிலையில் அவரது கட்சியின் ஆட்சியால் மக்களுக்கு இடர்கள் பொங்கி வழிகின்றன என்கிறது மூன்றாவது வரி, கடைசியில்...ஜெயலலிதா போனதும் அவரோடு தமிழகத்தின் கம்பீரமும் போய்விட்டது! மத்திய அரசிடம் மண்டியிட்டு இந்த எடப்பாடி ஆட்சி இருப்பதையும் சுட்டிக் காட்டி போட்டுப் பொளந்திருக்கிறார் பூங்குன்றன் என்று விளக்கம் கொடுக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தில்லுதான்!