அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன்? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, ஜல்லிப்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ’ஆனைமலை - நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் இதுவரை மூவாயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது’’ எனக் கூறிய அவர்,  ஏழைகளுக்கு வழங்க நினைத்த 2,000 ரூபாய் திட்டத்தை, அக்கட்சியினர் தடுத்து நிறுத்தியதாக திமுகவை விமர்சித்தார்.

’’அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? எத்தனை முறை போராட்டத்தை தூண்டிவிட்டாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது’’ என அவர் தெரிவித்தார். 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார்.