அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை நினைத்து தற்போது நடு நடுங்கி கொண்டிருக்கிறது அதிமுக அரசு. நாடாளுமன்ற தேர்தலை நினைத்து கவலைப்பட வேண்டியது, பாஜகவும் காங்கிரசும் தான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக இப்படி கலவரப்படவும் காரணம் இருக்கிறது. 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கின்றனர்.  

இந்த தீர்ப்பு பெரும்பாலும் அதிமுகவிற்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு மேல்முறையீடு என முயன்றாலும் கூட எடப்பாடியின் ஆட்சி கவிழத்தான் போகிறது என அதிமுகவினரே கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதிமுகவின் இந்த நடுக்கத்திற்கு காரணம் இந்த தீர்ப்பு கூறித்து நிலவும் கருத்து மட்டுமல்ல. 

அந்த கருத்தினை உறுதி செய்யும் வகையில் மத்தியிலும் சில செயல்பாடுகள் நடந்துவருகிறது என்பது தான். வரும் நாடாளுமன்ற தேர்தலின் போதே தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலும் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை தான் சமீபத்தில் மத்தியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் ஒன்று அதிமுகவிற்கு மறைமுகமாக உணர்த்தி இருக்கிறது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து, தலைமை தேர்தல் ஆணையம், சமீபத்தில் டெல்லியில் வைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பிறகு தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒரு சிறப்பு கூட்டம் நடத்தி இருக்கின்றனர் பாஜகவினர். 

இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பு அதிகம் என்பதால், பதவி எப்போது பறிபோகுமோ! என பயத்தில் இருக்கின்றனர் அதிமுக புள்ளிகள். அதற்கேற்ப பாஜகவினரும் எப்படியாவது தமிழகத்தில் நுழைந்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

ஒன்று திமுக அல்லது ரஜினி என இந்த இரண்டு பேரில் ஒருவர்  தான், தங்களின் தமிழக பிரவேசத்துக்கு சரியான கருவி என தேர்வு செய்தும் வைத்திருக்கின்றனர். தமிழகத்தில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் என இரண்டு பகுதிகளில் நடத்தவிருக்கும் இடைத்தேர்தலை கூட முடிந்த வரை தள்ளிவைத்து, ஒரேடியாக சட்ட மன்ற தேர்தலை நடத்திவிடலாம் எனும் எண்ணம் மத்தியில் இருப்பதால் கதிகலங்கி இருக்கும் அதிமுகவும், சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவருகிறது.

இதனால் தான்  சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள தேவையான நிதி திரட்டிட ,அதிமுக எம்.எல்.ஏக்களிடம் நிதி பிரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. ஆனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள், இந்த கதை எல்லாம் எங்களிடம் செல்லுபடி ஆகாது என சாடி இருக்கின்றனர். மொத்தத்தில் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போயிருக்கிறாராம் எடப்பாடி.