வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமியை வீடு தேடிச் சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளார் ஓபிஎஸ்.

மூன்று நாடுகள் பயணத்தை முடித்துவிட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமியை கிட்டத்தட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று வரவேற்றனர். கட்சியில் மிகவும் சீனியரான செங்கோட்டையன், தம்பிதுரை கூட விமான நிலையத்தில் காத்திருந்து எடப்பாடிக்கு சால்வை அணிவித்தனர். 

ஆனால் துணை முதலமைச்சரான ஓபிஎஸ் நேற்று விமான நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்க வரவில்லை. இதில் அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் முதலமைச்சர் தலைமைச் செயலகம் வந்த பிறகு துணை முதலமைச்சர் நேரில் சென்று சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று திடீரென சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி வீட்டுக்கு ஓபிஎஸ் கார் சென்றது. 

காலை 11 மணி அளவில் முதலமைச்சரை துணை முதலமைச்சர் சந்தித்தார். இந்த சந்திப்பு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான ஆலோசனைக்காகவே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. அதனால் பத்து நிமிடங்களில் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமார் 12.30 மணிக்கு மேல் தான் ஓ.பிஎஸ்சின் கார் அங்கிருந்து புறப்பட்டது. 

சமீப காலத்தில் முதலமைச்சர் – துணை முதலமைச்சர் இவ்வளவு நீண்ட நேரம் சந்தித்து பேசியதே இல்லை. ஏன் அதிமுக ஒன்றாக இணைந்த பிறகு கூட இவ்வளவு நேரம் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதில்லை. இது குறித்து விசாரித்த போது, வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு அனைவரையும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் வெளியேறச் சொல்லவிட்டதாகவும் சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் தனி அறையில் ஆலோசனை நடத்தியதாகவும் அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். 

முதலமைச்சர் வெளிநாட்டில் வந்திறங்கிய உடனேயே துணை முதலமைச்சர் அவரை நேரில் சென்று சந்தித்து இப்படி மூடிய அறைக்குள் ரகசியமாக பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுந்தது. இது குறித்து அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது, தமிழகம் முழுவதும் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மீது அடுக்கடுக்காக புகார்கள் வருகின்றன. மேலும் அதிமுகவின் பொதுக்குழுவையும் இந்த ஆண்டு கூட்ட வேண்டிய நிர்பந்தம் உள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. எனவே இந்த மூன்று விஷயங்கள் குறித்து பேசி இருவரும் முக்கிய முடிவுகள் எடுத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.