இலங்கை சிறையிலிருந்து 75 மீனவர்களையும், 42 மீன்பிடி படகுகளையும் அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை வசமுள்ள 107 படகுகளை விடுவிக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் அங்குள்ள படகுகளை விடுவிக்க மறைந்த ஜெயலலிதா, கடிதம் மூலம் வலியுறுத்தி வந்ததை சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு மீனவர்களை விடுவிக்க கேட்டுக் கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இலங்கை சிறையிலிருந்து 75 மீனவர்களையும், 42 படகுகளையும் விடுவிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர், இதற்காக தனிப்பட்ட முறையில் பிரதமர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடவடிக்கை எடுத்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை வசமுள்ள 107 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, மீனவர்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளை தீர்க்க இந்திய அரசும், தமிழக அரசும் பரஸ்பர முயற்சிகள் மேற்கொண்டு வருவதை இதன்மூலம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.