அமைச்சரவையில் இருந்து மூன்று பேர் நீக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இடைத்தேர்தல் முடிந்த பிறகு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் இருக்கும் அமைச்சர்களை நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக 3 அமைச்சர்களின் பதவி பறிப்பு உறுதி என்று கூறப்பட்டது. தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் எடப்பாடியாரின் அதிருப்தி பட்டியலில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இவர்கள் மூவரையும் நீக்கிவிட்டு இதுவரை அமைச்சர் பதவியை ஏற்காத 3 பேருக்கு பதவியை கொடுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பதவி பறிக்கப்படும் அமைச்சர்களின் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் வாய்ப்பு என்று கூறப்படுகிறது. அமைச்சர் பதவி உறுதி என்று கூறி கடந்த மூன்று காலமாதமாகவே அவர்களை எடப்பாடி தரப்பு குஷிப்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் ஜனவரி மாதம் மோடி தமிழகம் வருகை தர உள்ளது குறித்து விவாதிக்கத்தான் என்கிறார்கள். ஆனால் இந்த சந்திப்பின் போதே அமைச்சரவை மாற்றம் குறித்து எடப்பாடியார், ஆளுநரிடம் பேசிவிட்டதாக சொல்கிறார்கள்.

அதன்படி விரைவில் அமைச்சர்கள் மூன்று பேர் பதவி பறிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பதில் 3 பேர் புதுமுகங்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்தை பொறுத்தவரை ஆளுநர் தரப்பு முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்கிறார்கள். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம் கச்சிதமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இடைத்தேர்தல் கொடுத்த தெம்பு மற்றும் எதிர்கட்சிகளின் பலவீனம் போன்றவை தான் எடப்பாடியை இப்படி துணிச்சலமான முடிவுகளை எடுக்க வைப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.