edappadi palanisamy goverment is same jeyalalitha government not in use of tamilnadu by vijaykanth
ஜெயலலிதா போல் எடப்பாடியும் வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருவதாகவும் ஆனால் செயல்பாடுகளில் எதுவும் கிடையாது எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கடந்த 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும், தற்போது 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு மத்திய அரசு 65 சதவிதமும், மாநில அரசு 35 சதவிகிதமும் ஊதியம் வழங்கவேண்டும் எனவும், ஆனால் 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு ஊதிய உயர்வை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக வழங்காமல் ஏமாற்றியதாக குற்றம் எழுந்துள்ளதாகவும் முறையாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி இருந்தால், இந்த கல்வியாண்டில் 9,200 ரூபாய் ஊதியமாக பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 60 சதவிகிதத்தை வழங்காமல், மற்ற துறைகளுக்கு பயன்படுத்தி இலஞ்சத்திற்கும், ஊழலுக்கும் வழிவகை செய்துள்ளதாகவும் சுட்டி காட்டியுள்ளார்.
எனவே பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று உடனே தமிழக அரசு மத்திய அரசு வழங்கிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் எனவும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியை போல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறதே தவிர செயல்களில் எதுவும் செய்யாத ஆட்சியாகவே உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
