அ.இ.அதி.மு.க. தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் ஆன நிலையில் தமிழகம் முழுவதும் உற்சாகமாக இதைக்கொண்டாடி வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இன்று காலை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். ஒன்றுகூடி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அங்கிருந்து கிளம்பிய முதல்வர் எடப்பாடி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாலை நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார். செங்கல்பட்டு பாலாற்றை அடுத்த பகுதியான மாமண்டூரில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கவும், எம்ஜியார் சிலை திறப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டிருந்த சிலையைத் திறக்க எடப்பாடி மதியம் அங்கு வந்தார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது எதிர்ப்புரத்தில் தெரிந்த காட்சியை பார்த்த நிருபர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் நடிப்பில்  ‘வட சென்னை’ படம் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. இந்தப்படம் இன்று ரிலீஸ் என்பதால் தனுஷ் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கட் அவுட்டுகள் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.

இதைப் பொறுக்காத சிலர் மாமண்டூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தனுஷின் கட் அவுட்டை சில புடவைகளைக் கொண்டு மூடி மறைத்துள்ளனர்.
முதலமைச்சரின் வருகையின்போது அப்பகுதியில் வேறு யாரும் ஹைலைட் ஆகிவிடக்கூடாது என்பதால் இந்த கீழ்த்தரமான வேலையில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.