தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு தடை செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

விக்னேஷ் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்

 ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நகைக்காக வீட்டில் தனியாக உள்ள முதியவர்கள் கொலை, சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசாரணை கைதியாக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்துள்ளதாகவும், அதில் மரணம் அடைந்த விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு தமிழக அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தால் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, விசாரணை காவலில் இருந்த போது உயிரிழந்த விக்னேஷின் உடற்கூறு ஆய்வில் அவரது உடலில்13 இடங்களில் காயம், ரத்தக்கசிவு இருந்ததாக தெரியவந்துள்ளதாக கூறினார். இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால், சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழக காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்தால், விசாரணை நேர்மையாக நடைபெறாது எனவும் கூறினார். தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு அரசியல் நோக்குடன் இந்நிகழ்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பட்டின பிரவேசம் நிகழ்ச்சி வெளி இடத்தில் நடைபெறவில்லையென தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களின் வளாகத்திற்குள்ளே நடைபெறுவதாக கூறினார். எனவே இந்த நிகழ்விற்கு தடைவிதிக்க அரசுக்கு அதிகாரம் இல்லையென தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை ஆதினத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஓராண்டில் மோசமான திமுக ஆட்சி

தொடர்ந்து பேசியவர், திமுகவின் ஓராண்டு ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. அண்டை மாநிலத்திலிருந்து கஞ்சா கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிக்கப்பட்ட அறிவிப்புகளில் 70 சதவீதம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.