அதிமுகவில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிடிக்க, கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தமிழ்மகன் உசேனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று எம்ஜிஆர் மன்ற 40 மாவட்ட செயலாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக ஜூலை நாளை முதல் 8-ம் தேதி வரை வேட்பு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அதிமுகவுக்கு கிடைக்கும் 3 மாநிலங்களவை எம்பி பதவிகளை கேட்டு கூட்டணிக் கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, மக்களவைக்கான தேர்தல் கூட்டணி ஏற்பட்டபோதே, பாமகவுக்கு 7 சீட் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதனால் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்க வேண்டிய சூழ்நிலை அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில் கோகுல இந்திரா, தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் உள்ளனர்.

 

இதனிடையே, அதிமுக சார்பில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 40 எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர்கள் மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.