எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழ்வதை திமுக விரும்பவில்லை என்றும் இரு கட்சிகளுக்கும் மறைமுகமாக தொடர்பு இருப்பதாகவும் அமமுக கட்சி விமர்சித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அரசை மட்டுமே விமர்சித்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பார்வை தினகரன் பக்கம் அண்மையில் திரும்பியது. ஸ்டாலினும் தினகரனும் ஒருவருக்கொருவர் கடுமையாகப் பேசி விமர்சித்துக் கொண்டனர். இந்நிலையில் அமமுகவின் கட்சியினரும் திமுகவைத் தாக்கி பேசத் தொடங்கியுள்ளனர். தனியார் செய்தி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமமுகவின் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி திமுகவை சாடி பேசினார். 

அவர் பேசும்போது “எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழ்வதை திமுக நிச்சயம் விரும்பவில்லை. இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இதை அண்மையில் அமைச்சர் ஜெயக்குமாரே உறுதி செய்திருக்கிறார். அதிமுகவினரைவிட திமுக எம்.எல்.ஏ.க்கள்தான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். 

இந்தக் கருத்தை திமுக தரப்பிலிருந்து யாராவது மறுத்தார்களா? இதை எப்படிச் சொல்லலாம் என்று கேள்வி எழுப்பினார்களா? அவர்களுக்குள் மறைமுகமாக தொடர்பு இருக்கிறது. திமுகவினருக்குக் கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைக்கிறது. டெண்டர் கிடைக்கிறது. பிறகு இந்த ஆட்சி கவிழ்வதை எப்படி திமுக விரும்பும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.