எல்லா கருத்துக்கணிப்புகளும் மத்தியில் பி.ஜே.பி. அரசு அமையும் என சொல்லியுள்ளது. இது நிச்சயம் நடக்கும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த கருத்துக் கணிப்பில் மாறுபாடு சற்று வரும். தி.மு.க. பெருமைப்படும் வகையில் எதுவும் நடக்காது: இல.கணேசன். 
(அதென்னங்க பெரியவரே, உங்களை ‘நல்லவர்’ன்னு சொன்னா சந்தோஷப்படுறது, அடுத்தவனை ‘நல்லவர்’ன்னு சொன்னால் மட்டும் மறுக்குறது! இத்தன வருஷமா பாலிடிக்ஸ்ல நீங்க கத்துக்கிட்ட பக்குவம் இவ்வளவுதானா?)

*    ஆளும் அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தால், அது எப்படி இருக்கும் என்பதை கடந்த தேர்தல்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தத் தேர்தல்களில் ஆளும் அரசுகள் மீது மக்களுக்கு அப்படி எந்த கோபமும் இல்லை: வைகை செல்வம். 
(எப்படிண்ணே, ஜெயலலிதா உங்க மேலே செம்ம கோபமாகி, அமைச்சர் பதவியில இருந்து சொற்ப காலத்துல உங்களை தூக்கி வீசினாங்களே! அந்த மாதிரியான கோபமாண்ணே?)

*     தமிழகத்தில் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு, தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக சொல்லப்படுகிறது. லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் தி.மு.க. அணிக்கு சாதகமாகவே அமையும்: திருமாவளவன். 
(தலைவரே, எல்லாத்தையும் வழக்கம்போல ஓப்புவிச்சீங்க, ஓ.கே. ஆனால் ‘தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவோம்’ அப்படிங்கிற வரியை மறந்துட்டீங்க. 

*    எட்டு வழிச்சாலை என்பது மிகவும் அவசியம். அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்ப சாலை வசதிகளை அமைக்க வேண்டும். விவசாயிகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்:     எடப்பாடி பழனிசாமி .
(அண்ணே, தேர்தல் பிரசாரத்துல ‘இந்த எட்டுவழிச்சாலையானது மத்திய அரசின் திட்டம்.’ அப்படின்னு பிரச்னையை அவங்க தலைமேலே தூக்கி வெச்சீங்க. இப்ப ரிசல்ட் கூட வரலை அதுக்குள்ளே பிளேட்டை மாத்திப் போடுறீங்க. நீங்க தெளிவு, நாங்க லூசாண்ணே?)