அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் என்ற உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கடந்தாண்டு  எடப்பாடியால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன்  திடீரென சந்தித்துள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் நேற்று நடந்த, அதிமுக செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. அடுத்த முதல்வர் வேட்பாளர் நீயா, நானா என்பதில் எழுந்த போட்டி காரணமாக, கட்சியினர் முன்னிலையில், இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. ஆனால், தனது ஆதரவு  நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். இதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகலில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கபோவதில்லை என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் சொந்த ஊரான தேனிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனை அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலிருந்து நீக்கினார். கடந்த 2017 பிப்ரவரியில் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட முதல் அமைச்சர் மணிகண்டன்தான். இதனால், முதல்வர் எடப்பாடியின் மீது அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்தை ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.