வரும் 16ஆம் தேதி மாலை அதிமுகவின் மாசெக்கள்  கூட்டம் கூட்டப்படுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான   ஓ.பன்னீரும் , இணை ஒருங்கிணைப்பாளரான  எடப்பாடியார்  கூட்டியுள்ள கூட்டத்துக்கு முன்னதாகவோ, அந்தக் கூட்டத்திலேயோ மாசெக்கள் மாற்றம் நடக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெற்றதை அடுத்து விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார் எடப்பாடியார்.

தனது தலைமையில் அதிமுக ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடியார், அதற்காக கட்சியை வலிமைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். கட்சியின் பல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் ஜெ.,வின் மறைவுக்குப் பின் இதுவரை மா. செகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வரும் மாசெகள் கூட்டத்தை ஒட்டி சில மா.செகள் மாற்றப்படலாம் என்றும், அதைக் குமரி மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றும் கட்சியில் தகவல் உலவிவருகிறது. 

தமிழகம் முழுதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தினார்  எடப்பாடியார். ஆனால் அவரால் இன்று வரை குமரி மாவடத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த முடியவில்லை. காரணம் அங்கே இருக்கும் சீனியரான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்துக்கும், இப்போதைய மாநிலங்களவை எம்.பி. மற்றும் மாவட்டச் செயலாளருமான விஜயகுமாருக்கும் இருக்கும் பிரச்னைதான். இது எடப்பாடியார்க்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

அதுமட்டுமல்ல குமரியில் அதிமுகவுக்கு எம்.எல்.ஏ.க்களே இல்லை. எனவே மாசெ விஜயகுமார் மீது நடவடிக்கை எடுத்தால் மாவட்டத்தில் கட்சியில் எந்த பிளவும் வர வாய்ப்பில்லை என்பதை அறிந்துகொண்டுதான் இந்த மாவட்டத்தில் முதலில் கை வைக்க முடிவெடுத்திருக்கிறார்.

மேலும், விஜயகுமாருக்கும் தினகரன் குடும்பத்திற்கும் பிசினஸ் ரீதியான தொடர்புகள் இன்னும் நீடிப்பதாகவும் முதல்வருக்குப் புகார் போயிருக்கிறது. இதெல்லாம் சேர்த்து குமரி மாவட்டச் செயலாளரை மாற்றும் முடிவில் இருக்கிறார் எடப்பாடியார்.

இதுபற்றி பன்னீரிடம் ஆலோசித்திருக்கிறார். அப்போது குமரியை மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம் என்று இரண்டாகப் பிரித்து மேற்கு மாவட்டத்துக்கு ஜான் தங்கம், கிழக்கு மாவட்டத்துக்கு ஆவின் அசோகன் ஆகியோரை பன்னீர் சிபாரிசு செய்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் அறிவிப்பு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, மாசெக்கள் மாற்றத்தை ஒட்டி அமைச்சர்கள் மாற்றமும் இருக்கும் என்பதுதான் அதிமுக வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.