தினகரன் விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிட வேண்டாம் என்றும் நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனனுக்கு வாக்குறுதி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மீன்வளத்துறை ஜெயக்குமாருடனான மோதலை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாகவே மதுசூதனன் அப்ஷெட்டாக உள்ளார். கூட்டுறவு சங்க தேர்தலிலும் ஜெயக்குமார் தலையிட்டதால் ஏற்பட்ட கடுப்பால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து கூட ஒதுங்கியிருந்தார் மதுசூதனன். இதனை பயன்படுத்தி மீண்டும் மதுசூதனனை தன் பக்கம் இழுக்க தினகரன் காய் நகர்த்தினார். 

இதற்கு பிடிகொடுக்கும் வகையில் ஆர்.கே.நகருக்கு தினகரன் வந்த போது மதுசூதனன் ஆதரவாளர்கள் எந்த தகராறும் செய்யவில்லை. இதனால் மதுசூதனன் விரைவில் தினகரன் அணிக்கு சென்றுவிடுவார் என்று கூட தகவல்கள் வெளியாகின. மேலும் ஜெயக்குமார் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் கூறியபடி நடந்து கொள்ளவில்லை என்றும் மதுசூதனன் வருத்தத்தில் இருந்தார். 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மதுசூதனன் கலந்து கொண்டார்.

ஜெயக்குமார் மீது அதிருப்தியில் இருக்கும் மதுசூதனன் நிச்சயமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்றே கூறப்பட்டது. அவர் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு வருவதும் கடைசி வரை சஸ்பென்சாகவே இருந்தது. 

ஆனால் கூட்டத்திற்கு சரியான நேரத்தில் மதுசூதனன் வந்து சேர்ந்தார். இது குறித்து விசாரித்த போது தான், எடப்பாடிநேரடியாக தொலைபேசி மூலம் மதுசூதனனை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

அப்போது, தினகரன் விவகாரத்தில் அவசரம் வேண்டாம் என்றும், தற்போதைய சூழலில் ஜெயக்குமாருக்கு போதுமான அளவிற்கு அறிவுறுத்தல் கொடுத்துவிட்டதால் உங்கள் பக்கம் அவர் வரமாட்டார் என்றும் எடப்பாடி கூறியுள்ளார். 
இதனை தொடர்ந்தே கட்சி அலுவலகத்திற்கு மதுசூதனன் வருகை தந்துள்ளார்.

மேலும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான அ.தி.மு.க ஆர்பாட்டத்திற்கும் கூட, மதுசூதனனுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாருக்கு சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஜெயக்குமார் – மதுசூதனன் இடையிலான பிரச்சனைக்கு எடப்பாடி தீர்வு கண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மதுசூதனன் இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.