ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டதில், அவர் வந்து உட்கார்ந்துவிட்டார். இப்படிப்பட்ட ஒருவர், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் அமர்ந்த பதவியில் இருந்தார் என்பதை நினைத்துப் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. நீங்கள் திருந்தப்போவதில்லை.
மாநில சுயாட்சி என்றால் என்னவென்று தெரியாத ஒருவர் (இபிஎஸ்), இந்த மாநிலத்தை ஆட்சி செய்திருக்கிறார் என்பதை எண்ணி பார்க்கும்போது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி தென்காசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்த உள்ளாட்சித் தேர்தல் நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தலைவிட முக்கியமானது. உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதை நிரூபிக்க 100 சதவீத வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். திமுகவை அண்ணா தொடங்கியதிலிருந்து மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுத்தார். ஆட்டுக்கு தாடி இருப்பது போல நாட்டுக்கு கவர்னர் எதற்கு என்று கேட்டார். கவர்னர் பதவி தேவையில்லை என்பதுதான் நாம் வைக்கும் முழக்கம். இன்று அதிமுகவில் அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, பாஜகவின் குரலில் பேசிக்கொண்டிருக்கிறார். பாஜக என்ன சொன்னதோ அதையெல்லாம் கிளி பிள்ளைப் போல போற இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லும் அவர், விரைவில் ஒரே மொழி என்றும் சொல்லத் தொடங்கிவிடுவார். திமுக ஆட்சி செய்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தை ஆளுநர் முடக்க முடியும் என்று பேசுகிறார். இந்த இரண்டுமே மாநில சுயாட்சிக்கு எதிரானது. மாநில சுயாட்சிக்கு எதிராகவும் கவர்னரின் உரிமைகளுக்காகவும் பேசக்கூடிய எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நீங்கள் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டதில், அவர் வந்து உட்கார்ந்துவிட்டார். இப்படிப்பட்ட ஒருவர், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் அமர்ந்த பதவியில் இருந்தார் என்பதை நினைத்துப் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. நீங்கள் திருந்தப்போவதில்லை. எப்போதும் காலில் விழுந்த கிடந்தவர்களுக்கு, யார் காலிலாவது விழுந்து கிடக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது அவருடைய காலில் விழுந்தார்கள். இன்று ஒன்றிய ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர்களிடம் விழுந்துகிடக்கிறார்கள். அதனால், நீங்கள் மாறப்போவதில்லை. நிமிரப்போவதில்லை.

மாநில சுயாட்சி, மாநில உரிமைகளுக்காக வாழ்நாள் எல்லாம் குரல் எழுப்பிய அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கிறார்கள். அண்ணாவுக்கு துரோகம் செய்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அண்ணாவுக்கு நீங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச மரியாதை, அவருடைய பெயரையாவது தயவு செய்து கட்சியிலிருந்து எடுத்துவிடுங்கள். உங்களைப் போன்றவர்கள் அந்தக் கட்சியில் இருக்கும் நிலையில் அண்ணாவுக்கு மரியாதை இல்லை. மாநில சுயாட்சி என்றால் என்னவென்று தெரியாத ஒருவர், இந்த மாநிலத்தை ஆட்சி செய்திருக்கிறார் என்பதை எண்ணி பார்க்கும்போது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். மக்களின் உரிமைகளுக்காக மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காத ஆட்சிதான் அதிமுக ஆட்சி. அந்த அளவுக்கு சுயமரியாதையே இல்லாமல் ஒரு கட்சியை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் இருந்தபோது பாஜகவை எதிர்த்து எந்தக் கேள்வியும் இவர்கள் கேட்டதில்லை.” என்று கனிமொழி பேசினார்.
