சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 108 அவசர கட்டுப்பாட்டு மையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கொரோனா பணியில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள்,  ஓட்டுனர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. அப்போது அவசர சிகிச்ச ஊர்தி வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநராக தேர்வாகியுள்ள தேனி வீரலட்சுமி பாராட்டுகளை தெரிவித்து, பணி நியமன ஆணையையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். 

கொரோனா தொற்றுடைய 2 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் வழங்கப்பட்ட சேவையையும், பல்வேறு பேரிடர்களில் முன்னின்றதையும் பாராட்டி பேசினார். ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை ஒரே நேரத்தில் 50 சதவிகிதம் உயர்த்தியதற்கு முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில், "மக்கள் கோரிக்கையை ஏற்று நிறைய தளர்வுகள் அறிவுத்துள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பது குறித்து அவசர சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக விரைவில் முதல்வர் அறிவிப்பார். இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விலக்கு கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, தமிழக அரசின் உரிமையை விட்டுக்கொடுக்காமல் முதல்வர் பழனிசாமி சட்டப் போராட்டங்களை நடத்தியும், அரசியல் அழுத்தத்தை கொடுத்தும் வருவதுபோல எல்லா விசயத்திலும் எடுப்பார்" என்றார்.