அரசியலில் சில பஞ்ச் டயலாக்குகள் பல பஞ்சாயத்துகள், பஞ்சர்கள், பிரச்னைகளை தாண்டியும் வரலாறாய் வாழும். விலகிப்போன மாறனின் மகன்களான கலாநிதியும், தயாநிதியும் மீண்டும் இணைந்தபோது ‘கண்கள் பனித்தன! இதயம் இனித்தது!’ என்றார் கருணாநிதி. இந்த வார்த்தைக்காக அதன் பிறகு அவர் பல இடங்களில் அவர் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது தனி விவகாரம். 

அதேபோல் ‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளையே காணோம்!’ என்று தனது ஆட்சியின் போது எதிர்கட்சிகளைப் பார்த்து மிக இறுமாப்பாக பேசினார் ஜெயலலிதா. ஆனால் இன்று அவரது கட்சிக்குள்ளேயே அணியணியாய் பிரிந்து எதிரிகளாய் மோதிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி அணியுடன், ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்து சில மாதங்கள் கழித்தும் இரண்டு அணிகளுக்குள்ளும் பெரிதாய் எந்த நட்பும் பூக்காத நிலையில் ‘அணிகள் இணைந்தன! ஆனால் மனங்கள்? எம்.பி. மைத்ரேயன்.என்று கொளுத்திப் போட்டார்

இது பெரும் பரபரப்பை பற்ற வைத்தது. ’எடப்பாடிக்கும், பன்னீருக்கும் இடையில் இன்னமும் பவர் போட்டி நடக்கிறது! பன்னீரை எடப்பாடி டீம் மதிப்பதில்லை!’ என்று ஆளாளுக்கு தாறுமாறாக விமர்சித்துக் கொட்டினார்கள் இந்த மைத்ரேயனின் இந்த டயலாக்கை வைத்து. மைத்ரேயனினின் இந்த பஞ்ச் டயலாக் வெளியாகி பல மாதங்கள் ஆகிய நிலையிலும், இன்னும் பிளவு பிளவாகதான் இருக்கிறது என்று ஆதாரப்பூர்வமாக சொல்லுமளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 

அதாவது கோயமுத்தூர் சிட்டியில் நேற்று, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சார்பில் ஒரு விழா நடந்திருக்கிறது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்று கலந்து, விழாவை சிறப்பித்திருக்கிறார். இந்நிலையில், கோயமுத்தூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் அமைச்சரின் வருகையை கடுமையாக கண்டித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

அவர்...”தி.மு.க.வுக்கு ஆதரவான ஒரு அமைப்பு இந்த விழாவை நடத்தியது. இதில் எங்கள் ஆளுங்கட்சியின் அமைச்சர் வந்து கலந்திருக்கிறார். லோக்சபா தேர்தலை மையமாக வைத்து எதிர்கட்சி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு அமைச்சர் வந்து சென்றால், லோக்கலில் எங்களது மரியாதை என்னாவது? தேர்தல் நேரத்தில் இப்படி நடப்பது கட்சிக்குத்தானே சரிவு? அமைச்சர் இங்கே வரும் முன் இந்த விழாவை பற்றி எங்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தால் நாங்கள் யதார்த்தத்தை சொல்லியிருப்போம். ஆனால் எங்களை கண்டுகொள்ளாமல் வந்து சென்றிருக்கிறார்.

 

மாநகர் மாவட்ட கழக செயலாளராக நான் இருந்து என்ன பயன்? தி.மு.க. ஆதரவாளர் விழாவில் அமைச்சர் பங்கேற்றது வன்மையாக கண்டனத்துக்கு உரியது.” என்று வெளுத்துவிட்டார். இந்நிலையில் இது பற்றி பேசும் கோயமுத்தூர் மாவட்ட அ.தி.மு.க.வினர்....”ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் இந்த பி.ஆர்.ஜி.அருண்குமார். அணிகள் இணைந்து பதவியை மீண்டும் பெற்ற பின்னரும் அவரை யாரும் மா.செ.வாகவே மதிப்பதில்லை. கட்சியின் நிர்வாக வேலைகளை முழுமையாக அமைச்சர் வேலுமணியே செய்து கொள்கிறார். 

கட்சி பொறுப்புகளுக்கு ஆட்களை நியமிப்பதில் துவங்கி எல்லாமே அமைச்சரின் கண்ணசைவிலேயே நடப்பதால், கடும் காட்டத்தில் இருந்த அருண்குமார், இப்படின்  வெளி மாவட்ட அமைச்சரும் தன்னை மதிக்காமல் நடந்துள்ளதால் தாண்டவமாடிவிட்டார்.” என்றார்கள். சமீபத்தில்தான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரான அமைச்சர் கருப்பணனுக்கு எதிராக, பெருந்துறையின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் வெளிப்படையான எச்சரிக்கை பேட்டி தட்டியிருந்தார். தோப்பினால் ஏற்பட்ட சலசலப்பு அடங்கும் முன்னரே அடுத்த வெடி வெடித்திருப்பதால் எடப்பாடியார் ஏக அப்செட்.