பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்திய வழக்கி தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாவின் ஓசூர் தொகுதி எம்.எ.ஏ. பதவி காலியாகும் நிலை ஏற்பட்டிருப்பதால், சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் ஆட்டம் கண்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்த பாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரது அமைச்சர் பதவி பறிபோனதோடு அவரது எம்.எல்.ஏ. பதவியும் பறிபோகும் நிலை உருவாகிவிட்டது. இடைக்கால தடை கேட்டு பாலகிருஷ்ணா தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால், ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சட்டப்பேரவை செயலகம் உள்ளாகியுள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆளும் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் 136 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி அரசுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைத் தொடர்ந்தார். 

அதிமுக வசம் இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி, கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதியும் காலியானது. இதனால், தற்போது காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சட்டப்பேரவையின் பலம் 214-ஆக குறைந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் ஆட்சியைத் தொடரலாம். இதன் அடிப்படையில்தான் எடப்பாடி அரசு சிக்கல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

 

ஆனால், அதிமுகவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் இருக்கிறார்கள். இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரும் இருக்கிறார்கள்.  இவர்களில் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் அதிமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள். இவர்களைக் கழித்துவிட்டு பார்த்தால் 110 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

இதுபோன்ற சூழ்நிலையில்தான் ஓசூர் தொகுதியும் காலியாக உள்ளதால் சட்டப்பேரவையில் காலியாக உள்ளத் தொகுதிகளின்  எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்க உள்ளது. இதனால் அதிமுகவின் பலம் 109 ஆக குறைந்திருக்கிறது. தற்போது நூலிழையில்தான் ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்கள். இதனால் சட்டப்பேரவையில் அதிமுக அரசு ஆட்டம் கண்டிருக்கிறது. 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தால், எடப்பாடி அரசுக்கு சிக்கல் வந்துவிடும். இந்த எண்ணிக்கை இன்னும் கூடினால் ஆட்சி கவிழும் நிலை உருவாகிவிடும்.